வேலைச் செலவினம் தொடர்பில் 3,000க்கு மேற்பட்டோர் தவறான தகவல் சமர்ப்பிப்பு

வேலைச் செலவினம் தொடர்பில் 3,000க்கு மேற்பட்டோர் தவறான தகவல் சமர்ப்பிப்பு

வரியைக் குறைப்பது தொடர்பில் தவறான தகவல்: உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரிக்கை
1 of 2
படம்: சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Oct 2026 - 4:15 pm

2 mins read

சிங்கப்பூரில் தவறான முறையில் வேலைவாய்ப்புச் செலவினக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்த வரிசெலுத்துவோர் 3,000க்கும் மேற்பட்டோரைச் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) அடையாளம் கண்டுள்ளது.

வருமான வரியைக் குறைப்பது குறித்துத் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக புதன்கிழமை (அக்டோபர் 21) வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் எச்சரித்துள்ளது. தொடர்ச்சியான மறுஆய்வுகள் மூலம் இந்த 3,000 பேர் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி, செய்யாத செலவுகளையோ வரி விலக்கிற்கு அனுமதிக்கப்படாத பயன்பாடுகளையோ வரிக்கழிவாகக் கோர வேண்டாம் என வரிசெலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்களின் வரிப் படிவத்தில் செய்யப்படும் கோரிக்கைகள் செல்லுபடியாகும் வகையிலும் துல்லியமாகவும் இருப்பதை அவர்கள் உறுதி செய்யவேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.

ஒருவர் தங்களின் அதிகாரபூர்வ கடமைகளைச் செய்யும்போது ஏற்படும் தகுதியுள்ள செலவுகளுக்கு மட்டுமே வரிக்கழிவு அளிக்கப்படும். சொந்த உணவுக் கட்டணம், வீட்டு வாடகை, சந்தாக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வீட்டுக்கும் வேலைக்கும் இடையிலான பொதுப் போக்குவரத்துச் செலவுகள், தனியார் கார் செலவுகள், கைப்பேசிகள், கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்களை வாங்குதல் ஆகியவற்றுக்கு வரிக்கழிவு அளிக்கப்படமாட்டாது.

முறையான ஆவணங்கள், ரசீதுகள் மூலம் நிரூபிக்கப்படாத கோரிக்கைகள் அனுமதிக்கப்படமாட்டா. தவறான அல்லது ஆதாரமற்ற கோரிக்கைகளைச் சமர்ப்பித்தவர்கள் ‘அமெண்ட் டாக்ஸ் பில்’ மின்னிலக்கச் சேவை, இணையப் படிவம் அல்லது நேரலை உரையாடல் சேவை மூலம் அவற்றை உடனடியாகத் திருத்தவோ திரும்பப் பெறவோ செய்யலாம்.

தவறான கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், குறைவாகச் செலுத்தப்பட்ட வரியைப்போல மூன்று மடங்கு வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் $10,000 வரையிலான அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சரிபார்க்கப்படாத வரிக்கான ஆலோசனைகளை நம்ப வேண்டாம் என்றும் தவறான கோரிக்கைகளை ஊக்குவிக்கும் தகவல்களை உருவாக்கவோ பரப்பவோ வேண்டாம் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்