சிங்கப்பூருக்குள் நுழையக்கூடாது என கடந்த ஆண்டு 33,100 வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அவர்களால் சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படலாம் என்று தோன்றியதன் காரணமாக, சிங்கப்பூருக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்து உள்ளது.
அது தனது வருடாந்தர புள்ளிவிவர அறிக்கையை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) வெளியிட்டது.
2024ஆம் ஆண்டு முழுவதும் 230 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றதாக ஆணையம் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
அந்த எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 38 மில்லியன் அதிகம்.
சிங்கப்பூருக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த அதேவேளை திருப்பி அனுப்பப்படுவோரின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு அதிகமாக இருந்தது.
2023ஆம் ஆண்டு 28,600 வெளிநாட்டினருக்கு அனுமதி தரப்படவில்லை. 2024ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 4,500 அதிகரித்து 33,100 ஆனது.
சிங்கப்பூருக்குள் நுழைந்த பின்னர் சட்டவிரோதக் குடியேறிகளாக மாறுவர், சட்டவிரோதமாக இங்கு வேலை செய்வர், குற்றங்களில் ஈடுபடுவர் என்பன போன்ற அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வருடாந்தர வருகையாளர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரின் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக வந்து சென்றனர். மொத்த பயணிகளில் அவர்கள் 75 விழுக்காடு.
குறிப்பாக, 2024 டிசம்பர் 24ஆம் தேதி துவாஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகள் வழியாக, சாதனை அளவாக 562,000 பேர் கடந்தனர். ஒரேநாளில் இந்த அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்தது அன்றுதான்.
சாங்கி விமான நிலையத்தில் நிறுவப்பட்ட புதிய அனுமதி முறை (என்சிசி - NCC) தானியக்கத் தடங்களையும் கடப்பிதழ் தேவைப்படாத அனுமதியையும் உள்ளடக்கி உள்ளது. விரும்பத்தகாத பயணிகளை வடிகட்ட அந்த முறை கைகொடுத்து இருப்பதாக ஆணையம் தெரிவித்து உள்ளது.
என்சிசி வழியாகத் திரட்டப்படும் முகம் மற்றும் அங்க அடையாளத் தரவுகள், புதிய ஒருங்கிணைந்த இலக்கு மையப் (ஐடிசி - ITC) பிரிவால் ஆராயப்படுகிறது.
வெளிநாட்டினர் சிங்கப்பூருக்கு வருகை தருமுன்னரே அவர்களால் ஏற்படக்கூடிய அபாயங்களை ஆராய்ந்து, ஆபத்து மிகுந்தோரை ஐடிசி அடையாளம் கண்டுவிடுகிறது.