சிங்கப்பூருக்கு வருகைதரும் வெளிநாட்டுப் பயணிகளில் அதிகமானோர் தானியக்கத் தடங்களின் மூலம் குடிநுழைவுச் சோதனையை நிறைவுசெய்யலாம்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, சீனா, ஹாங்காங் உட்பட 51 பகுதிகளின் கடப்பிதழ் வைத்துள்ளோருக்குத் தானியக்கத் குடிநுழைவு சோதனை முறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது 16 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தானியக்கத் தடங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதுவரை நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தானியக்கத் தடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
`ஏபெக்' தொழில்முறை பயண அட்டைதாரர்களும் இனி தானியக்கத் தடங்களைப் பயன்படுத்தலாம். ஆசிய பசிபிக் வட்டாரத்திற்குள் குறுகியகால வணிகப் பயணம் மேற்கொள்ள அந்த அட்டை வகைசெய்கிறது.
சிங்கப்பூருக்கு முதன்முறையாக வருகைபுரியும் தகுதியுள்ள வெளிநாட்டுப் பயணிகள் குடிநுழைவுச் சோதனைக்காகத் தானியக்கத் தடங்களைப் பயன்படுத்த தானியக்கக் குடிநுழைவுச் சோதனைத் திட்டம் வழிவகை செய்கிறது.
வரும் 2024 முதல் காலாண்டுவாக்கில், சிங்கப்பூருக்கு வருவோரில் 95 விழுக்காட்டினர் தானியக்கத் தடங்கள் வழியாக குடிநுழைவுச் சோதனையை முடித்துச் செல்ல முடியும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.
தானியக்கத் தடங்களுக்கு இடமும் மனிதவளமும் அதிகம் தேவைப்படுவதில்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சாங்கி விமான நிலையத்தில் 130 தானியக்கத் தடங்களிலும் நிலவழி சோதனைச்சாவடிகளில் 40 தானியக்கத் தடங்களிலும் தானியக்கக் குடிநுழைவுச் சோதனைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் சென்ற ஆண்டு மொத்தம் 125 தானியக்கத் தடங்கள் நிறுவப்பட்டன.