புதிய தொழில்நிறுவன ஊழியரணி உருமாற்றத் தொகுப்புத் திட்டத்திற்கு (Enterprise Workforce Transformation Package) $400 மில்லியனுக்கும் மேல் ஒதுக்கப்படவுள்ளது.
மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் வியாழக்கிழமை (மார்ச் 6) இதனை அறிவித்தார்.
இத்திட்டத்தின்கீழ், புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஊழியரணி வளர்ச்சி மானியமும், புதிய $10,000 நிரப்புதொகையோடு மறுவடிவமைக்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொழில்நிறுவன உதவிநிதியும் அறிமுகமாகும்.
வேலை மறுவடிவமைப்புக்கு 70% வரை நிதியாதரவு
தற்போது, வேலை மறுவடிவமைப்பு ஆலோசகர்களின் உதவியை நாட 50 விழுக்காடு வரை (அதிகபட்சம் $30,000) நிதியாதரவை சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு (WSG) வழங்குகிறது. புதிய ஊழியரணி வளர்ச்சி மானியத்தின்வழி, நிதியாதரவுக்கான உச்சவரம்பு 70 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும். $30,000 வரம்பும் மறுஆய்விற்குப்பிறகு உயர்த்தப்படும் என்று அமைச்சர் டான் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பமுறை எளிதாகும்
இம்மானியம் அறிமுகமானதும், தொழில் மானியத் தளம் (Business Grants Portal) எனும் ஒரே இணையவாயில் வழியாக வேலை மறுவடிவமைப்பு, திறன்மேம்பாடு, பயிற்சி எனப் பலவகையான ஆதரவுக்கும் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூரும் முன்பு நிர்வகித்த திட்டங்களை இம்மானியம் இணைத்துள்ளது.
$10,000 நிரப்புதொகை
குறைந்தது மூன்று சிங்கப்பூர்வாசிகளைக் கொண்ட நிறுவனங்கள், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொழில்நிறுவன உதவிநிதியின்கீழ் புதிதாக $10,000 உதவித்தொகையை 2026ன் இரண்டாம் பாதியில் பெறும்.
பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், இந்த உதவிநிதி, மின்னிலக்கப் பணப்பையைப் போல் மறுவடிவமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
என்டியுசி மானியத்திற்கு மேலும் $200 மில்லியன்
தொழில்நிறுவன ஊழியரணி உருமாற்றத்திற்கான தொகுப்புத் திட்டத்தைத் தவிர்த்து, நிறுவனங்களுக்கு மற்ற வகைகளிலும் நிதியாதரவு வழங்கப்படும்.
அவ்வகையில், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) நிறுவனப் பயிற்சிக் குழு மானியத்துக்குக் கூடுதலாக $200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மானியம் 2026லிருந்து 2028 வரைக்கும் நீட்டிக்கப்படும்.
நிறுவனங்களின் வழிநடத்துதலோடு ஊழியர்களுக்கு முறையான சான்றிதழ்கள் வழங்கும் பயிற்சிகளுக்கும் இம்மானியம் விரிவடையும்.
திறன்மேம்பாட்டிற்குப் புதிய முத்தரப்புப் பணிக்குழு
இப்புதிய பணிக்குழுவழி, மனிதவளத் துறையினரின் தரமும் தேர்ச்சியும் மேம்படும் என்றும் இது வேலையிட உருமாற்றத்துக்கு முக்கியப் பங்களிக்கும் என்றும் அமைச்சர் டான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.