இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 415 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளி அல்லது அதற்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டதாகச் சொத்துச் சந்தை நிறுவனமான ஆரஞ்சுடீ குழுமத்தின் தரவு தெரிவிக்கிறது.
2025ஆம் ஆண்டின் முற்பாதியில் அவ்விலைக்கு விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டில் அவ்விலைக்குப் போன வீடுகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டைத் தொட்டுவிட்டதாக அது குறிப்பிட்டது.
சிங்கப்பூர்வாசிகளில் பத்தில் எட்டுப் பேர் வீவக வீடுகளில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், இவ்வாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் 415 வீவக வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளி அல்லது அதற்குமேல் விலைபோனதாகச் சொல்லப்படுகிறது. இது, 2024 இரண்டாம் காலாண்டைக் காட்டிலும் 75.8 விழுக்காடு அதிகம்.
நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஒரு மில்லியன் வெள்ளி அல்லது அதற்கும் அதிகமான விலைக்கு 348 வீவக வீடுகள் விலைபோயின.
சென்ற ஆண்டில் மட்டும் 1,035 வீவக வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளி அல்லது அதற்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டன. இந்நிலையில், இவ்வாண்டில் அச்சாதனை முறியடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆரஞ்சுடீ குழுமப் பகுப்பாய்வாளர்களின் அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆக அதிகமாக, 122 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு வீடு $1,658,888 தொகைக்கு விற்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, காலாண்டு அடிப்படையில் மறுவிற்பனை வீட்டு விலை 0.9 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அரசாங்கம் முன்னர் வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன. தொடர்ந்து 21 காலாண்டுகளாக மறுவிற்பனை வீட்டு விலை அதிகரித்துள்ளபோதும், 2020 இரண்டாம் காலாண்டிற்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான உயர்வு விகிதம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டின் எஞ்சியுள்ள காலத்திலும் வீவக வீடுகளின் மறுவிற்பனை விலை உயர்வு மிதமாக இருக்கும் என்பது ஆரஞ்சுடீ குழுமப் பகுப்பாய்வாளர்களின் கணிப்பு. ஆண்டு அடிப்படையில், அந்த உயர்வு 4% முதல் 5.5% வரை இருக்கும் என அவர்கள் முன்னுரைத்துள்ளனர்.
இதனிடையே, 2025 முற்பாதியில் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், முழு ஆண்டிற்குமான பொருளியல் வளர்ச்சியானது 1.5% முதல் 2.5% வரை இருக்கலாம் என்று அரசாங்கம் முன்னுரைத்துள்ளது.

