மார்ச் மாதத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட காகங்கள் கொல்லப்பட்டன

மார்ச் மாதத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட காகங்கள் கொல்லப்பட்டன

2 mins read
5550458a-e33d-4d9b-b22a-a4628f601017
பீஷான், ஜூரோங், கிராஞ்சி, பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ, உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய ஒன்பது இடங்களில் காகம் சுடும் நடவடிக்கை இடம்பெற்றதாக தேசிய பூங்காக் கழகத் தெரிவித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காகங்களைச் சுட்டுக்கொல்லும் நடவடிக்கை மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து 500க்கும் மேற்பட்ட காகங்கள் கொல்லப்பட்டதாக தேசியப் பூங்காக் கழகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் வரையில் பீஷான், ஜூரோங், கிராஞ்சி, பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ, உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய ஒன்பது இடங்களிலும் சுடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

காகங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள புக்கிட் பாஞ்சாங், மரின் பரேட், தானா மேரா போன்ற பிற பகுதிகளுக்கும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்பட உள்ளதாகக் கழகம் கூறியது.

காகம் சுடும் நடவடிக்கையின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 
காகம் சுடும் நடவடிக்கையின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள காகம் சுடும் நடவடிக்கையின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

துப்பாக்கித் தோட்டாக்கள் எப்போதுமே மேல்நோக்கி மட்டுமே சுடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான விதிகளைத் துப்பாக்கி சுடுவோர் பின்பற்ற வேண்டும் என்று தேசியப் பூங்காக் கழகத்தின் வனவிலங்கு மேலாண்மைக் குழும இயக்குநர் ஹைவ் சூன் பெங் கூறினார்.

காகங்கள் ஆபத்தை எளிதில் கண்டறிந்து தப்பிக்கும் திறன் கொண்டவை என்பதால், சூழ்நிலைக்கு ஏற்பப் பாதுகாப்புடன் செயல்பட வேண்டியுள்ளது.

காகங்கள் மனிதர்களைத் தாக்குவதாகவும், அவற்றின் எச்சங்களால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதாகவும் புகார்கள் அதிகரித்ததை அடுத்து, ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்திக் காகங்களைச் சுடும் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டது.

சிங்கப்பூரில் 2016ஆம் ஆண்டு 7,200 ஆக இருந்த காகங்களின் எண்ணிக்கை 2024ல் கிட்டத்தட்ட 160,000 ஆக அதிகரித்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

காகங்களைக் கட்டுப்படுத்த அவற்றைச் சுடுவதுடன், அவற்றைப் பிடித்தல், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் கூடுகளை அகற்றுதல் போன்ற மற்ற முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சட்டவிரோதமாகப் பறவைகளுக்கு உணவளிப்பவர்களைக் கண்காணிப்பதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காகங்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகவும் நிரந்தரமாகவும் குறைக்க இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடரும் என்று கழகம் தெரிவித்தது.

காகங்கள் ஆக்கிரமிப்பு இனத்தைச் சேர்ந்தவை என்பதால், அவை உள்நாட்டுப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, மனிதர்களையும் தாக்குகின்றன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்காகம்தேசிய பூங்காக் கழகம்துப்பாக்கிச்சூடுபொதுமக்கள்தொல்லை