செந்தோசாவில் உள்ள மூன்று கடற்கரைகளில் ஜூன் 15ஆம் தேதி முதல் எண்ணெய் படிந்த 71,000 கிலோகிராமுக்கும் மேற்பட்ட மணல் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிர் பாஞ்சாங் முனையத்தில் ஜூன் 14ஆம் தேதி, தூர்வாரிக் கப்பல் ஒன்று நின்றுகொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை மோதியதில் 400 டன் எரிபொருள் கடலில் கசிந்தது.
அதையடுத்து மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளை மேற்பார்வையிடத் தாம் செந்தோசா சென்றிருந்ததாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ ஜூன் 20ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட இடங்களைத் துப்புரவு செய்ய ஊழியர்கள் மிகக் கடுமையாக உழைப்பதாக அவர் கூறினார்.
எண்ணெய் கசிந்ததால் பலாவான், சிலோசோ, தஞ்சோங் கடற்கரைகளில் உள்ள மணலில் கறுப்புக் கறை படிந்தது. ஆகவே அந்தக் கடற்கரைகளிலிருந்து 71,000 கிலோ எண்ணெய் படிந்த மணல் அகற்றப்பட்டதாக அமைச்சர் சொன்னார்.
கூடுதல் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அவர் சுட்டினார்.
கடற்கரையோரப் பகுதிகளில் துப்புரவுப் பணிகள் நிறைவடைய கூடுதல் காலம் பிடிக்கும். அதுவரை பொதுமக்கள் பொறுமையுடனிருக்கும்படி அமைச்சர் ஃபூ கேட்டுக்கொண்டார். மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்படுவதற்கு முன்பு, அந்த இடங்களில் தண்ணீரின் தரம் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.