மோசடிக்காரர்களிடம் 8,700க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட $73 மில்லியன் இழப்பதை, காவல்துறையின் மோசடிக்கு எதிரான நிலையத்துடன் கூட்டாகச் செயல்பட்ட ஆறு வங்கிகளும் தடுத்துள்ளன.
மோசடிகளை முறியடிப்பதற்குத் தொழில்நுட்பத்தை நாடிய அதிகாரிகள், 2024ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை இணைந்து செயல்பட்டனர். ‘ஏஎஸ்சி’ எனப்படும் காவல்துறையின் மோசடிக்கு எதிரான நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் வங்கிகளும் கிட்டத்தட்ட 13,000 குறுந்தகவல்களை வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பினர்.
இந்தக் குறிப்பிட்ட வாடிக்கையாளர்ப் பிரிவினர், மோசடிக்கு ஆளாகக்கூடியவர்களாக அடையாளம் காணப்பட்டதாக ஜனவரி 8ஆம் தேதி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையால் 1,444க்கும் மேற்பட்ட மோசடிகளை வெற்றிகரமாக நிறுத்த முடிந்ததாகவும் $73 மில்லியனுக்கு மேற்பட்ட பண இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடிந்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
வேலை, முதலீடு, நண்பர் போல் நடித்தல், இணைய வர்த்தகம் ஆகியவை தொடர்பான மோசடிகளுக்கு ஆளாகக்கூடியவர்களைக் கண்டறிய, இயந்திரச் செயல்முறை தானியக்கத் தொழில்நுட்பத்தை அதிகாரிகள் பயன்படுத்தினர்.
டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி, ஸ்டான்டர்ட் சார்டட், எச்எஸ்பிசி, ஜிஎக்ஸ்எஸ் ஆகிய ஆறு வங்கிகளும் அதிகாரிகளுக்குக் கைகொடுத்தன. 2024ஆம் ஆண்டில் காவல்துறையுடன் இணைந்து மோசடிகளைத் தடுத்த ஆறாவது கூட்டு முயற்சியாக இது அமைந்தது.