ஓராண்டுக்கும் மேலாக பேரங்காடிகள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பைகளுக்கு ஐந்து காசு விதிக்கத் தொடங்கியதும் 90 விழுக்காடு வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் மளிகைப் பொருள்களை எடுத்துச் செல்ல பையும் கையுமாக வருகின்றனர்.
இது தான் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஐந்து காசு விதிக்கும் நடைமுறை கட்டாயமாக்கப்படுவதற்கு முன் 61 விழுக்காட்டினரே சொந்தப் பை கொண்டு வந்ததாகக் கூறிய சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், இந்த மாற்றம் ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றார்.
அமைச்சர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30ஆம் தேதி) அன்று சிட்டி ஸ்குவேர் மாலில் என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் புதிய கிளையை திறந்து வைத்து மேற்கண்டவாறு பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்தக் கட்டணம் கட்டாயமாக்கப்பட்ட பின் ஒருமுறை பயன்படுத்தப்படும் பைகள் வழங்கப்படுவது 70லிருந்து 80 விழுக்காடு குறைந்திருப்பதாக அங்காடிகள் தெரிவித்துள்ளன என்றும் விளக்கினார்.
கடந்த 2023ஆம் ஆண்டின் பிற்பாதியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பைகள் வழங்குவது கிட்டத்தட்ட 77 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. அத்துடன், கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023ஆம் ஆண்டு 142 மில்லியன் குறைவான பைகள் வழங்கப்பட்டதாக ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.
ஃபேர்பிரைசின் சிட்டி ஸ்குவேர் மாலில் உள்ள புதிய கிளை அதன் சுற்றுப்புறத்தை போற்றும் வடிவமைப்புடன் விளங்குவதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள பொருள்களை வைத்துச் செல்லும் வண்டிகள் மறுபயனீடு நெகிழியால் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
தேசிய சுற்றுப்புற வாரியம் மேற்கொண்ட இந்த ஆய்வில், ஏறத்தாழ 1,000 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பைகள் சராசரியாக மூன்று என்ற எண்ணிக்கையிலிருந்து ஒன்றாகக் குறைந்ததாக தெரிவித்தனர்.


