மக்கள் அன்றாடம் நாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பறைசாற்றும் விதமாகச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் (சிடிசி) நடைப்பயிற்சிப் பாதைகள் திட்டம் சனிக்கிழமை (மார்ச் 14) அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ‘வாக்கிங் டிரெய்ல்ஸ்@சிடிசி’ எனப்படும் திட்டத்துக்குக் கிடைத்த வலுவான வரவேற்பின் அடிப்படையில் இந்தப் புதிய, மரபு சார்ந்த திட்டம் மீண்டும் அறிமுகம் காண்கிறது.
அடுத்த ஈராண்டுகளில் 20 மரபுசார்ந்த ‘வாக்கிங் டிரெய்ல்ஸ்@சிடிசி’ நடைப்பயிற்சிப் பாதைகள் படிப்படியாகச் சிங்கப்பூர் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ தெரிவித்தார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் திரு நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இத்திட்டம் தொடங்கியதிலிருந்து குடியிருப்பாளர்கள் கிட்டத்தட்ட 30,000 பேர், 80,000க்கும் மேற்பட்ட நடைப்பயிற்சிப் பாதைகளை நிறைவுசெய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
“பொதுமக்களால் மட்டுமே இந்த அற்புதமான வெற்றி சாத்தியமானது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அவருடன் ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களின் மேயர்களான லோ யென் லிங், பே யாம் கெங், டெனிஸ் புவா, அலெக்ஸ் யாம், தினேஷ் வாசு தாஸ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“புதிய ‘வாக்கிங் டிரெய்ல்ஸ்@சிடிசி’ திட்டம் இன்னும் அதிகமாக மக்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என நடைப்பயிற்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி புவா குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சமூக மேம்பாட்டு மன்றங்களுடன் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (GovTech), தேசிய மரபுடைமைக் கழகம் (National heritage Board) இணைந்து இந்த மரபுசார்ந்த நடைப்பயிற்சிப் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
சனிக்கிழமை காலை 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரனாக்கன் அரும்பொருளகம், பிராஸ் பாசா வளாகம், சுல்தான் பள்ளிவாசல், கோல்டன் மைல் உணவு நிலையம், ஜாலான் புசார் விளையாட்டரங்கு போன்ற மத்திய வட்டாரத்தின் முக்கிய இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
நடைப்பயிற்சியின்போது பங்கேற்பாளர்கள் மின்னிலக்கச் சோதனைச் சாவடிகளைக் கடந்துசெல்வர். அத்துடன், ‘ஆலி’ (OLLIE) எனப்படும் ஆறு பொம்மைகளைக் கண்டுபிடிக்கும் பங்கேற்பாளர்களுக்கு $10 வெகுமதி வழங்கப்படும்.
அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், குடும்பப் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம் வலுவான சமூகப் பிணைப்புகளை வளர்க்கிறது என்று தெரிவித்தார் சுபாஷ் கோபாலகிருஷ்ணன், 40.
திரு சுபாஷ் தம் மனைவி மற்றும் அண்டைவீட்டாருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
“மேலும், சாதாரணமாகக் கருதும் இடங்களை மீண்டும் புதுமையான கோணத்தில் பார்வையிட இந்தப் புதிய நடைப்பயிற்சித் திட்டம் வாய்ப்பளிக்கிறது,” என்று தமிழ் முரசிடம் அவர் கூறினார்.
‘சிடிசி’ நடைப்பயிற்சிப் பாதைகள் தொடர்பான மேல்விவரங்களை go.gov.sg/walkingtrailscdc இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

