ஓடியாடி விளையாட வேண்டிய இளம் கிஸ்டினாவை 13 வயதில் ரத்தப் புற்றுநோய் பாதித்தது. சிறு வயதில் கொடூர நோய்க்கு ஆளாகிய கிஸ்டினா மனதளவில் பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டார்.
பள்ளி, நண்பர்கள் என இளம் பருவத்தை மகிழ்ச்சியாகக் கழித்த அவரின் நாள்கள் ‘கீமோதெரப்பி’ சிகிச்சையிலும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதிலும் கழிந்தன. நிச்சயமற்ற சூழல் ஒரு சவாலாக இருந்தபோதிலும் கிஸ்டினாவின் குடும்பம் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.
“என் உலகமே நின்றதுபோல் இருந்தது,” என்று நினைவுகூர்ந்தார் அவர்.
இருப்பினும், சிறுவர் புற்றுநோய் அறநிறுவனத்தின் ‘கல்வி கற்றலுக்கான இடம் மற்றும் ஆதரவுத்’ திட்டத்தின் உதவியுடன் இன்னல்களைக் கடந்து தனது பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.
வடிவமைக்கப்பட்ட கூடுதல் பயிற்சி வகுப்புகள் முதல் ஆலோசனை வழங்குவது வரை கிஸ்டினாவின் கல்விப் பயணத்தில் இத்திட்டம் மிகுந்த ஆதரவு அளித்தது. சிறுவர் புற்றுநோய் அறநிறுவனத்தின் ஆசிரியர்கள், சமூகச் சேவையாளர்கள் அளித்த நம்பிக்கையில் கிஸ்டினா மனந்தளராது சவால்களை எதிர்நோக்கினார்.
கிஸ்டினா போன்ற இளையர்களுக்கு சிறுவர் புற்றுநோய் அறநிறுவனம் உதவி வருகிறது. அது மட்டுமல்லாமல், குழந்தைப் பருவ புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைந்த சமூக ஆதரவின் முக்கியத்துவத்தையும் கிஸ்டினாவின் கதை வெளிக்காட்டுகிறது.
“புற்றுநோயை எதிர்கொள்ளும் மற்ற குழந்தைகள் இந்த இன்னலைக் கண்டிப்பாக கடக்க முடியும். இருள் இருந்தால் ஒளியும் உண்டு,” என்று உறுதிகொண்டார் கிஸ்டினா.


