சிங்கப்பூரின் அடுத்த தேர்தலில் வெகுநாட்களாக இருந்து வந்துள்ள விதி ஒன்று மாற உள்ளது.
இதன்படி, வேட்பாளர்களின் வெளிநாடுகளைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
இதன் மூலம் அவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தொகுதியில் வலம் வருவது போன்றவற்றில் ஈடுபடலாம்.
ஆனால், பிரசாரம் செய்து ஆதரவு தேடவோ வாக்காளர்களின் நிலைப்பாட்டை மாற்றவோ முயற்சி செய்யக்கூடாது என்று உள்துறை அமைச்சு, தேர்தல் துறை, மின்னிலக்க மேம்பாடு, தகவல் அமைச்சு ஆகியவை திங்கட்கிழமை (பிப்ரவரி 3ஆம் தேதி) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதி தேர்தல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், அரசின் மின்னிதழில் வெளியானதைத் தொடர்ந்து மேற்கூறப்படும் கூட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த மாற்றங்கள் நடைமுறை சாத்தியத்துக்கு உட்பட்டது என்று குறிப்பிட்ட உள்துறை அமைச்சு, வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க விழைவதைத் தான் உணர்வதாகக் கூறியது.
அதே சமயம் அரசியல் பங்கேற்பு சிங்கப்பூரர்களுக்கு மட்டுமே என்ற கொள்கையில் இருந்து தான் மாறவில்லை என்றும் அமைச்சு விளக்கியது.
இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, வெளிநாடுகளைச் சேர்ந்த, நிரந்தரவாசிகள் உட்பட, குடும்ப உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் எழுத்துபூர்வ அனுமதி பெற வேண்டியதில்லை.