தற்போது நடைபெற்று வரும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ‘பிடிஓ’ வீட்டு விற்பனையில் ஈரறை ஃபிளக்ஸி வீடுகளைக் கைப்பற்றுவதில் முதல் முறையாக வீடு வாங்கும் ஒற்றையர்கள் தீவிரம்காட்டி வருகின்றனர்.
சில வீட்டுக் கட்டுமானத் திட்டங்களில் உள்ள ஒரு வீட்டுக்கு 20 ஒற்றையர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர்.
பிடிஓ வீடுகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதற்கு ஒற்றையர்கள் முக்கிய காரணம் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது.
அதாவது, அக்டோபர் 21ஆம் தேதி வரை எல்லா வகையான வீடுகளுக்கும் ஏறக்குறைய 28,200 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அது தெரிவித்தது.
2022 நவம்பர் மாத பிடிஓ விற்பனைக்குப் பிறகு தற்போதுதான் ஆக அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அக்டோபர் 21ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், அக்டோபர் 23 இரவு 11.59 மணிக்கு முன்பு ஏறக்குறைய 35,000 முதல் 40,000 வரையிலான விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாக வீவக குறிப்பிட்டது.
இதனை கருத்தில்கொண்டால் ஒரு வீட்டுக்கு நான்கு முதல் ஐந்து விண்ணப்பங்கள் வரலாம்.
அண்மைய அக்டோபர் மாத விற்பனையில் 8,500க்கும் அதிகமான வீடுகள் வெளியிடப்பட்டன. இவை அனைத்தும் ஸ்டாண்டர்ட், பிளஸ், பிரைம் என்ற புதிய வகைப்பாட்டின்கீழ் விற்கப்படு கின்றன. வீடுகள் நகரத்தின் மையத்தில் இடம்பெற்று இருப்பது, அருகில் எம்ஆர்டி நிலையங்கள் இருப்பது போன்றவற்றின் அடிப்படையில் வீடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எம்ஆர்டி நிலையங்கள், நகர மையம் போன்ற முக்கிய வசதிகளுக்கு அருகில் உள்ள வீடுகள் ‘பிரைம்’, ‘பிளஸ்’ கீழ் வருகின்றன. இத்தகைய வீடுகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தங்குவது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அக்டோபர் மாத விற்பனையில் தகுதிபெற்ற ஒற்றையர்கள் எல்லா இடங்களிலும் ஈரறை ஃபிளக்ஸி வீடுகளுக்கு விண்ணப்பிக்க முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் ஒற்றையர்களால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்று ஃபேஸ்புக் பதிவில் வீவக தெரிவித்தது.
மொத்த விண்ணப்பங்களில் இதுவரை ஒற்றையர்களின் பங்கு மட்டும் ஏறக்குறைய 20 விழுக்காடாகும்.
“இதே போன்ற வரவேற்பு 2013ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒற்றையர்கள் ஈரறை வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டபோது கிடைத்தது,” என்று அது கூறியது.
இருந்தாலும் காலப்போக்கில் ஈரறை ஃபிளக்ஸி வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஒற்றையர்களிடமிருந்து தேவை குறையும் என எதிர்பார்ப்பதாக வீவக மேலும் தெரிவித்தது.