சட்டவிரோதமாக காரில் விளக்குகளைப் பொருத்தியவருக்கு அபராதம்

2 mins read
d68bcb54-17cc-4d8a-95df-047c5d75ff26
வாகனங்களில் சட்டவிரோதமாக சாதனங்களைப் பொருத்தும் சேவை வழங்கும் நிறுவனங்களும் தண்டிக்கப்படும் என்று எல்டிஏ கூறியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விதிகளுக்குப் புறம்பாக தமது காரில் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் மின்னும் விளக்குகளைப் பொருத்திய ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டில் அதுபோன்ற குற்றங்கள் குறைவாகப் பதிவானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்து உள்ளது.

வாகனங்களைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றி அமைக்கும் குற்றங்கள் தொடர்பாக ஆணையத்திடம் மின்னஞ்சல் வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 5) அது பதிலளித்தது.

அத்தகைய குற்றங்களுக்காக 2023ஆம் ஆண்டு ஏறத்தாழ 5,000 அழைப்பாணைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 4,000ஆகக் குறைந்தது என்றது ஆணையம்.

பொதுவாக, ஒலிப்பான் (horn), இழுவைக் கொக்கிகள் மற்றும் அலங்கார விளக்குகளை வாகனங்களில் பொருத்திக்கொள்ள அனுமதி இல்லை. அவ்வாறு பொருத்துவது சட்டவிரோதமாகும்.

வாகன ஓட்டுநர்கள் மட்டுமின்றி, அத்தகைய சாதனங்களைப் பொருத்தும் சேவையை வழங்கும் வாகனப் பட்டறைகளும் தண்டனைக்கு உள்ளாகும்.

2024ஆம் ஆண்டு அதுபோன்ற 23 பட்டறைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக ஆணையம் கூறியுள்ளது.

சென்ற மாதம் எஸ்ஜி ரோட் விஜிலெண்டே என்னும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட இரண்டு காணொளிகளில் கார் ஒன்று மின்னும் விளக்குகளுடன் காணப்பட்டது. அதன் முன்புறக் கண்ணாடியின் மேலிருந்து விளக்கு வெளிச்சம் வருவதை அந்தக் காணொளிகள் காட்டின.

அவற்றில் ஒரு காணொளி பிப்ரவரி 6ஆம் தேதி வரை 210 முறை பகிரப்பட்டது. காணொளியில் வெளியான கார் தொடர்பாக 66 கருத்துகளும் பதிவாயின.

அதுபோன்ற விளக்குகள் அனுமதிக்கப்படுகின்றனவா என்று சிலர் அதில் கேட்டிருந்தனர்.

இதற்கிடையே, அந்த காரின் உரிமையாளருக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் என்ன நடவடிக்கை என்பதை அது விளக்கவில்லை.

சட்டவிரோதமாக விளக்குகளைப் பொருத்தியதற்காகப் பிடிபட்டவர்களில் ஸ்டீவன் லிம் என்பவர், அதற்குத் தகுந்த காரணங்கள் இருப்பதாகக் கூறினார்.

டிசம்பர் 31ஆம் தேதி பிடிபட்ட அவரது காரில் சிவப்பு மற்றும் நீல நிற விளக்குகள் மின்னின.

விரைவுச் சாலையில் விபத்து ஏற்பட்டால் இதர வாகனங்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை அளிப்பதற்காக அவற்றைப் பொருத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

வாகனப் பரிசோதனைக்கு அவரது காரை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவுக்கு அவர் இணங்க மறுத்து காரை அனுப்பவில்லை.

அதற்காகவும் சட்டவிரோதமாக விளக்குகளைப் பொருத்தியதற்காகவும் திரு லிம்முக்கு $200 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறினார் சட்ட நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் திரு லிம்.

குறிப்புச் சொற்கள்