மூன்று ஊழியர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்த 2021ஆம் ஆண்டின் துவாஸ் வெடிப்புச் சம்பவத்தில், பாதுகாப்புக் குறைபாடுகளால் தீப்பாதுகாப்புச் சாதனத்தை நிறுவிய நிறுவனமும் அதன் இயக்குநரும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பங்ளாதேஷைச் சேர்ந்த ஷோஹெல் முகமது, 23, அனிசுஸாமன் முகமது, 29, இந்திய நாட்டவரான சுப்பையா மாரிமுத்து, 38, ஆகிய மூவரும் அந்த விபத்தில் உயிரிழந்தனர்.
2021 பிப்ரவரி 24ஆம் தேதி, துவாஸ் அவென்யூ 11ல் ஸ்டார்ஸ் என்ஜினியரிங் வேலையிடத்தில் கலவை இயந்திரம் வெடித்ததில் மூவரும் மாண்டனர்.
அந்த விபத்தில் உயிர் பிழைக்க முடியாத அளவுக்கு அவர்களின் உடல் முழுவதும் 90 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் மேலும் ஏழு பேர் காயம் அடைந்தனர். ஐவர் அதே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இருவர், அருகில் மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள்.
21 நாள்களாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் ஸ்டார்ஸ் நிறுவனமும் அதன் இயக்குநரான சிங்கப்பூரர் சுவா ஸிங் டாவும், 42, குற்றவாளி என செவ்வாய்க்கிழமை (மே 26) தீர்ப்பு வழங்கப்பட்டது.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார சட்டத்தின்கீழ் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பில் அந்நிறுவனம் மீதும் அதன் இயக்குநர் மீதும் தலா இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
திரு சுவா, ஸ்டார்ஸ் நிறுவனத்தின் ஒரே இயக்குநர் ஆவார். அவர் வேலையிடத்தை தனது கவனிப்பில் வைத்திருந்தார். அவரும் அவரது நிறுவனமும் கலவை இயந்திரம் பயன்படுத்த பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய தவறிவிட்டது.
ஊழியர்களுக்கு போதுமான பயிற்சியும் அளிக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
தீர்ப்பு வழங்கியபோது பேசிய மாவட்ட நீதிபதி டான் ஜென் சே, கலவை இயந்திரம் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த எவ்வளவோ செய்திருக்கலாம் என்றார்.
இதே வழக்கில் தொடர்புடைய மியன்மார் நாட்டவரான லிவின் மோ டுன், 36 என்ற ஸ்டார்ஸ் நிறுவனத்தின் திட்டப் பொறியாளர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கலவை இயந்திரத்தைச் சரிசெய்ய ஊழியர்களை அனுமதித்ததால் பாதுகாப்பில் அவர் கவனக்குறைவாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
ஆனால் லிவின் மோ டுன், கலவை இயந்திரத்தை பழுதுபார்க்க ஊழியர்களை அனுமதித்தற்கான சான்றுகள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

