38, ஆக்ஸ்லி சாலை வீட்டின் தொடர்பில் முன்னதாகச் செய்யப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமைவிட, நினைவுச் சின்னப் பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படாததால், மற்றுமோர் ஆய்வு தேவைப்படுவதாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியிருக்கிறார்.
வாரியம் அந்தத் தகவல்களைத் தனது தன்னிச்சையான மதிப்பீட்டின் ஒரு பகுதியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்றார் அவர்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய், செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சியா ஆகியோர், சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் முந்தைய வீட்டைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு திரு டோங் பதில் அளித்தார்.
தேசிய மரபுடைமைக் கழகம் செய்த மதிப்பீட்டின் அடிப்படையில், அந்த வீடு வரலாற்றுச் சிறப்புமிக்கது, மரபுடைமை, கட்டடக் கலை சார்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று முன்னதாக அமைச்சர்நிலைக் குழு உறுதிசெய்த பிறகு, மேலும் ஓர் ஆய்வுக்கான தேவையைப் பற்றி திரு லியோங் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக தேசிய மரபுடைமைக் கழகத்தின் கண்டுபிடிப்புகள் அமைச்சர்நிலைக் குழுவின் 2018ஆம் ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவை அமைவிட, நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று திரு டோங் எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிட்டார்.