மக்கள் கழகம் சார்பில் அதிபர் சவால் 2025க்கான ஆதரவை உறுதிசெய்யும் ‘பிஏ கேர்ஸ்’ @ அதிபர் சவால் 2025 விழா ஞாயிற்றுக்கிழமை இம்பேக்ட் @ ஹோங் லிம் கிரீனில் நடைபெற்றது.
விழாவில் மக்கள் கழகம் அதிபர் சவாலுக்காக உறுதிபூண்டுள்ள $250,000க்கான காசோலை வழங்கப்பட்டது.
மக்கள் கழக சமூக விளையாட்டுக் கட்டமைப்பு, மக்கள் கழகத்தின் சிறப்புச் சமூக மன்றம் ‘இம்பேக்ட் @ ஹோங் லிம் கிரீன் (PA’s Specialist Community Club imPAct@Hong Lim Green), மக்கள் கழக இளையர் அணி இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் கலாசார, சமூக, இளையர்துறை, வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்கும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
“சிங்கப்பூரர்கள், தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் இணைந்து வசதி குறைந்தோர்க்கு ஆதரவளிக்கும் அதிபர் சவால் நிதிக்கு மக்கள் கழகம் 2001லிருந்து பங்களித்து வருகிறது. அதன் தொடர்பில், இவ்வாண்டும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார் திருவாட்டி லோ.
“நிதி திரட்டைத் தாண்டி, கனிவு, இரக்கம், அனைவரையும் உள்ளடக்கிய உணர்வு ஆகியவற்றை மேம்படுத்தி, பாகுபாடின்றி அனைவரும் மதிக்கப்படுவதை அதிபர் சவால் உறுதிசெய்கிறது,” என்றார்.
இவ்வுணர்வை சமூகத்தில் விதைக்கும் நோக்கில் செயல்படும் தொண்டூழியரும் விளையாட்டுப் பயிற்சியாளருமான ஆறுமுகம் காளியப்பனைக் குறிப்பிட்டுப் பாராட்டினார் திருவாட்டி லோ.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளையும் பிற மாணவர்களையும் ஒன்றிணைத்து விளையாட்டுப் பயிற்சி அளிப்பதன் மூலம் திரு ஆறுமுகம் புரிதலை மேம்படுத்துவதாக திருவாட்டி லோ வாழ்த்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“தற்போது ஒரு வட்டாரத்தில் செயல்படும் இந்த முன்னெடுப்பு, அடுத்து சுவா சூ காங்கிற்கும் விரிவடையும்,” என்றார் அவர்.
“சிறு வயதிலிருந்து விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக வேண்டும் என்பது எனது கனவு. அதன்வழி நான் பல ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்துள்ளேன். அடுத்த கட்டமாக அர்த்தமுள்ள ஈடுபாடுகொள்ள வேண்டும் எனும் நோக்கில் இந்தப் பயிற்சியைத் தொடங்கினேன்,” என்றார் திரு ஆறுமுகம், 50.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பணியாற்றும் இவர், தமது பணி நேரத்தையும் தாண்டி இலவசமாக இச்சேவையை வழங்குகிறார்.
விளையாட்டு பல வாழ்வியல் கூறுகளைக் கற்றுத்தரும் எனக் கூறிய அவர், தம்மிடம் பயிலும் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்குப் பலருடன் இணைந்து விளையாடும்போது தன்னம்பிக்கை கூடுவதைப் பார்க்க முடிவதாகக் கூறினார்.
பிற மாணவர்களுக்கு சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் குறித்த புரிதலும் அவர்களும் நம்மில் ஒருவர் எனும் உணர்வும் ஏற்படுகிறது என்றார் அவர்.
“அடுத்த கட்டமாக அனைவரும் இணைந்து விளையாடும் மன்றங்கள் ஏற்பட்டு அவர்களுக்கான ‘லீக் போட்டிகள்’ உருவாக வேண்டும். அதனை நோக்கிய பயணத்தில் ஈடுபட விழைகிறேன்,” என்றார் திரு ஆறுமுகம்.
மேலும், இந்நிகழ்ச்சியில் அனைவருக்குமான உடற்பயிற்சி தொடர்பான அங்கங்கள் இடம்பெற்றன. அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டுக் கட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அர்த்தமுள்ள தொடர்புகளையும் உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 1,000 பேர் பங்கேற்றனர்.
சிறு பங்களிப்பும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தும் வண்ணம், குடியிருப்பாளர்கள், பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து, ‘அக்கறை தரும் மகிழ்ச்சி’ எனும் நிதி திரட்டுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று மக்கள் கழகம் தெரிவித்தது.

