யுனெஸ்கோ பட்டியலுக்குப் பாடாங்கையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் சிங்கப்பூர் பரிந்துரைக்காது

யுனெஸ்கோ பட்டியலுக்குப் பாடாங்கையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் சிங்கப்பூர் பரிந்துரைக்காது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Nov 2026 - 5:41 pm

2 mins read

யுனெஸ்கோ பட்டியலுக்குப் பாடாங்கையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் பரிந்துரைக்கப்போவதில்லை என்று தேசிய மரபுடைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்காகத் தொடக்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கழகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) தெரிவித்தது.

பாடாங் திடல், அதனைச் சுற்றியுள்ள சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், விக்டோரியா திரையரங்கு, பழைய நாடாளுமன்றக் கட்டடம், செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம், ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகம் ஆகியவை பாடாங் குடிமைத் தொகுப்பில் உள்ளடங்கும்.

யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றால், அது மேம்பாட்டிற்குக் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கழகம் அடையாளம் கண்டது.

ஸ்டாம்போர்ட் ராஃபிள்சின் 1822ஆம் ஆண்டு நகரத் திட்டத்தில் திறந்தவெளித் திடலாக உருவாக்கப்பட்ட பாடாங், ஆங்கிலக் காலனித்துவ ஆட்சியிலிருந்து சிங்கப்பூர் சுதந்திர நாடாக மாறிய பல வரலாற்று நிகழ்வுகளுக்குச் சாட்சியாகத் திகழ்கிறது.

அத்தகைய முக்கியத்துவம் கொண்ட அத்தொகுப்பை மதிப்பீடு அடையாளம் கண்டது.

ஆனால் இத்தொகுப்பு யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெறக் கூடுதல் மாற்றங்கள் தேவைப்படும்.

முதலில், சிங்கப்பூர் வரையறுத்ததைவிட விரிவான பெரிய இடைநிலைப் பகுதியை நிலைநிறுத்த வேண்டும். இது ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளால் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

அடுத்து, தொகுப்பைச் சுற்றியுள்ள முக்கியக் காட்சிகளைப் பாதுகாப்பதும் அவசியம்.

கடைசியாக, தொகுப்பின் வரலாற்று, மரபுடைமை முக்கியத்துவத்தைப் பாதிக்காதவாறு இந்தப் பகுதிகளில் எதிர்கால மேம்பாடுகளை நிர்வகிக்க வேண்டும்.

இந்த மாற்றங்கள், தொகுப்பைத் தாண்டி, மிகப்பெரிய பகுதிக்குப் பொருத்தமானவையாக இருக்கும்.

இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மேம்பாடுகள் உட்பட, எதிர்கால மேம்பாடுகள் குறித்துச் சிங்கப்பூர் யுனெஸ்கோ உலக மரபுடைமை அமைப்புடன் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும்.

பரிந்துரையை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என்ற சிங்கப்பூரின் முடிவு, தொகுப்பின் மரபுடைமை முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்காலத் திட்டங்களுக்குப் போதுமான நீக்குப்போக்குத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பிரதிபலிக்கிறது என்றது கழகம்.

யுனெஸ்கோ தளங்களைச் சிங்கப்பூர் கையாளும் விதம் மற்ற இடங்களிலிருந்து மிகவும் வேறுபட்டது என்று தெரிவித்தார் கழகத்தின் தளங்கள், நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் ஜீன் வீ.

“இதனால் எங்களுக்கு எந்த வருமானமும் வருவதில்லை. இது தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார்.

கழகம் தொடக்க மதிப்பீட்டை முற்றிலும் சுயமாக மேற்கொண்டது என்றும் அவர் கூறினார்.

2028ஆம் ஆண்டிலிருந்து யுனெஸ்கோ உலக மரபுடைமை அமைப்பால் பரிசீலிக்கப்படும் அனைத்துப் பரிந்துரைகளுக்கும் இந்த மதிப்பீடு கட்டாயமாக்கப்படும்.

உலக மரபுடைமைச் சின்னம் என்பது, மிகச்சிறந்த உலகளாவிய மதிப்புக் கொண்ட, சட்டபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட பகுதி.

தற்போது பூமலை, சிங்கப்பூரின் ஒரே யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளமாக விளங்குகிறது.

குறிப்புச் சொற்கள்