தீவு விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் நால்வர் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (ஜனவரி 18) பிற்பகல் 3.25 மணிவாக்கில் ஸ்டீவன் சாலை முடிவுக்கு அடுத்து விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் கூறினர்.
விபத்து தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில் குறைந்தது 9 வாகனங்கள் சாலையின் நடுத் தடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
விபத்தில் காயமடைந்தவர்களைக் கொண்டு செல்ல அவசர உதவி வாகனமும் நின்று கொண்டிருந்ததையும் காணொளியில் பார்க்க முடிந்தது. மேலும், சில அதிகாரிகள் முதலுதவி நடவடிக்கை மேற்கொண்டனர்.
விபத்தில் ஒரு கார் ஓட்டுநரும் மூன்று பெண் பயணிகளும் காயமடைந்தனர். அவர்களின் வயது 34க்கும் 77க்கும் இடைப்பட்டது, மருத்துவமனைக்குச் செல்லும்போது அவர்கள் நால்வரும் சுயநினைவுடன் இருந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.
எட்டு கார் ஓட்டுநர்கள், ஒரு வேன் ஓட்டுநர் விபத்து குறித்த விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் குறைந்தது ஐந்து பல வாகனங்கள் தொடர்புடைய விபத்துகள் நேர்ந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
நவம்பர் மாதம் 26ஆம் தேதி தீவு விரைவுச்சாலையில் 6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டன. அதில் 6 பேர் காயமடைந்தனர்.
இதுபோன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து ஏற்பட்டது. அதில் 17 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.