தீவு விரைவுச்சாலையில் செப்டம்பர் 20ஆம் தேதி வேனை மோதிவிட்டு நிற்காமல் சென்ற 36 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் பிற்பகல் 1 மணியளவில் நடந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
வேனில் பயணம் செய்த 28 வயது ஆடவர் நினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
உரிமமின்றி வாகனம் ஓட்டியது, அபாயகரமான ஆயுதம் வைத்திருந்தது ஆகியவை தொடர்பில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
அவரிடமிருந்த ‘கை முட்டிக்காப்பு’ (Knuckleduster) எனும் அபாயகரமான ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

