பாண்டான் நீர்தேக்கத்தில் முதலை தென்பட்டதாகத் தகவல் அளிக்கப்பட்டபோது அதற்கு சான்றாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) அளிக்கப்பட்ட புகைப்படம் போலியானது என்று பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) அதன் விசாரணைகளில் கண்டறிந்துள்ளது.
அது குறித்து பியுபி காவல்துறையில் புகாரளித்துள்ளது என்று அதன் ஃபேஸ்புக்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு 8.45 மணியளவில் கழகம் பதிவிட்டுள்ளது.
“பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வழக்கமான நடவடிக்கைகளுக்கு தடங்கல் விளைவிக்கும் பொய்யான தகவல்களை பியுபி கடுமையான குற்றமாகக் கருதுகிறது. நாங்கள் தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டதோடு காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்,” என்று அதன் பதிவில் பியுபி தெளிவுபடுத்தியது.


