புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தின் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) காலை மழை பெய்தபோதும் நன்முறையில் நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் பலர் காவடிகளையும் பால்குடங்களையும் நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர்.
“சிங்கப்பூரில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரமும் ஒன்று,” எனச் செய்தியாளர்களிடம் கூறிய உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம், பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த ஆண்டு பல முயற்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
அமைச்சர் சண்முகத்துடன் மக்கள் செயல் கட்சியின் புதுமுகங்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹருன் அல்ஹப்ஷி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் இயக்குநர் கோ ஹன்யான் இருவரும் பக்தர்களைச் சந்தித்தனர்.
பின்னர், சுகாதார அமைச்சர் ஒங் யீ காங்கும் திருவிழாவில் கலந்துகொண்டார்.
புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் இந்த ஆண்டு முதன்முறையாகக் காவடிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை இணையம்வழி விற்பனை செய்தது.
அது ஒரு நல்ல முடிவு என்று பக்தர்கள் சிலர் தமிழ் முரசிடம் பகிர்ந்தனர்.
ஆலயத்துக்கு நேரடியாகச் செல்வதைவிட இணையம்வழி நுழைவுச்சீட்டுகளை வாங்குவது எளிதாக இருந்தது என்றும் நேரம் மிச்சப்பட்டது என்றும் காவடி ஏந்திய பக்தர்கள் ஷியாம், 53, ஷான் குமார், 43, இருவரும் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
“இப்போதெல்லாம் அனைத்து நடைமுறைகளும் மின்னிலக்கத்திற்கு மாறிவருகின்றன. இணையம்வழி இன்னும் எளிதாக நுழைவுச்சீட்டுகளை வாங்க முடிந்தது,” என்றார் ரமேஷ் சுப்பிரமணியம், 56.
இருப்பினும் வேறு சிலர் இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வாங்கியபோது சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறினர்.
சுமார் 18 ஆண்டுகளாகப் பங்குனி உத்திரத் திருவிழாவில் காவடி ஏந்தும் ராஜசேகர் கருணாகரன், 39, இணையம்வழி நுழைவுச்சீட்டுகளை வாங்க முடியவில்லை என்றார்.
தம்பியுடன் நேர்த்திக்கடன் செலுத்திய அவர், ஆலயத்திடம் விண்ணப்பம் செய்து நுழைவுச்சீட்டைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.
காவடிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் ஒரு மணி நேரத்துக்குள் விற்று முடிந்தது, பக்தர்கள் சிலருக்கு ஏமாற்றம் அளித்தது. பின்னர் அவர்கள் ஆலய நிர்வாகத்தை அணுக நேரிட்டது.
ஒவ்வொரு பக்தரின் தேவைக்கு ஏற்ப விண்ணப்பங்களைப் பரிசீலித்து நுழைவுச்சீட்டுகளை வழங்கியதாக ஆலய நிர்வாகம் குறிப்பிட்டது.
அதோடு நுழைவுச்சீட்டு விற்பனையின்போது இணையத்தில் ஏற்பட்ட கோளாறும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்குள் சரிசெய்யப்பட்டதை ஆலய நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
காவடிகளுக்கு மட்டுமன்றி பால்குடங்களுக்கும் இணையம்வழி முன்பதிவு செய்துகொள்ள முடிந்தால் சிறப்பாக இருக்கும் என்றார் பால்குடம் சுமந்த தர்ஷினி ரஜேந்திரன், 37.
“பால்குடத்துக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்க ஆலயம் குறிப்பிட்ட நேரத்தையும் நாள்களையும் அறிவித்திருந்தது. ஆனால், அந்த நேரங்களில் எல்லாம் நான் வேலையிடத்தில் இருக்கவேண்டியிருந்தது. வேலை முடிந்து ஒரு நாள் முன்கூட்டியே சென்று நுழைவுச்சீட்டுகளை வாங்கினேன்,” என்றார் தர்ஷினி.
பங்குனி உத்திரத் திருவிழா சீராக நடைபெற கிட்டத்தட்ட 150 தொண்டூழியர்கள் கைகொடுத்தனர்.
“இன்று வார நாள். அப்படியிருந்தும் காலையிலிருந்து வேண்டுதல்களை நிறைவேற்ற மக்கள் கூட்டமாக வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் தொண்டூழியர் ஜெயசித்ரா இளங்கோவன், 43.
ஆலயத்துக்கு அருகில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதிலும் தொண்டூழியர்கள் உதவினர்.
இரவு 10.30 மணி வரை நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் பக்தர்கள் பலர் தொடர்ந்து காவடிகளுடனும் பால்குடங்களுடனும் வேண்டுதல்களை நிறைவேற்ற ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டு கிட்டத்தட்ட 5,000 பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.