ஜாலான் புசார் குழுத்தொகுதியைக் கைப்பற்ற மக்கள் செயல் கட்சியும் சீர்திருத்த மக்கள் கூட்டணியும் போட்டியிடுகின்றன.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோவின் தலைமையில் திருவாட்டி டென்னிஸ் புவா, 66, டாக்டர் வான் ரிசால், 46, புதுமுகம் ஷான் லோ, 38, அடங்கிய அணி களம் காண்கிறது.
ஏப்ரல் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லை.
கொங் ஹுவா பள்ளியிலிருந்த வேட்புமனுத் தாக்கல் நிலையத்திற்கு புதன்கிழமை (ஏப்ரல் 23) காலை 10 மணியளவில் தமது அணியுடன் வந்த திருமதி டியோவை ஆரவாரத்துடன் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
கடந்த பொதுத் தேர்தலிலிருந்து ஜாலான் புசார் குழுத்தொகுதியில் சேவையாற்றிவரும் திருமதி டியோ, “மக்கள் செயல் கட்சி உங்களுக்காகச் சேவையாற்றி இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறது,” என்று உற்சாத்துடன் திரண்டிருந்த ஆதரவாளர்களிடம் கூறினார்.
சீர்திருத்த மக்கள் கூட்டணி, அரசியலுக்குப் புதியவரான திரு சியு ஷின் கொங் அடங்கிய அணியை ஜாலான் புசாரில் களமிறக்கியுள்ளது.
51 வயது தனியார் துணைப்பாட ஆசிரியரான திரு சியுவுடன் வர்த்தகர் முகமது ஹமிம் அலியாஸ், 62, தாதி சரினா அபு ஹசான், 53, பாலர் பள்ளி ஆசிரியர் விக்னேஸ்வரி ராமச்சந்திரன், 43, ஆகியோர் களமிறங்குகின்றனர்.
“எங்கள் அணியில் நிதி நிர்வாக வல்லுநர்கள் பலர் உள்ளனர். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க அரசாங்கத்தின் நிதியிருப்பிலிருந்து பணத்தை எடுக்காமல் நிதியைச் சரியாக நிர்வகித்தால் போதும். அதற்கான திட்டங்கள் எங்களிடம் உண்டு. நாடாளுமன்றத்திற்குச் சென்றால் அதை விரிவாக முன்வைப்போம்,”என்றார் குமாரி விக்னேஸ்வரி.
தொடர்புடைய செய்திகள்
2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட குமாரி விக்னேஸ்வரி, ஜாலான் புசார் குழுத்தொகுதியின் வாம்போ பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக வசிக்கிறார். எனவே தேர்தல் களம் தமக்குப் புதிதன்று என்றார் அவர்.

