மக்கள் செயல் கட்சி (மசெக) அல்ஜுனிட் குழுத் தொகுதி, ஹவ்காங் தனித்தொகுதிகளுக்கான கிளைத் தலைவர்களை மாற்றியுள்ளது.
ஹவ்காங் தனித்தொகுதியின் மசெக கிளைத் தலைவராக திரு ஜாக்சன் லாமுக்குப் பதிலாக வழக்கறிஞர் மார்ஷல் லிம் பொறுப்பேற்கிறார். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தொகுதியில் ஆளுங்கட்சி வேட்பாளராக நிற்கக்கூடியவர் மாற்றப்படுகிறார்.
அல்ஜுனிட் குழுத்தொகுதியின் ஐந்து கிளைத் தலைவர்களில் திரு கென்னி சிம், திரு ஷம்சுல் கமார், திரு விக்டர் லாய் ஆகிய மூவரும் மாற்றப்படுவதை மசெக வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தனது இணையப்பக்கத்தில் உறுதிப்படுத்தியது.
அவர்களும் திரு லாமும் பிப்ரவரி 17ஆம் தேதி பதவி விலகுவார்கள் என்று கட்சி தெரிவித்தது.
திரு ஜாக்சன் லாம் 2024 அக்டோபரில் ஹவ்காங் தொகுதி கிளைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2015ஆம் ஆண்டிலும் 2020ஆம் ஆண்டிலும் திரு ஷம்சுலும் திரு லாயும் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் களமிறக்கப்பட்டனர். திரு சிம், 2024 ஆகஸ்ட் மாதம் பாய லேபார் கிளைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
திரு ஷம்சுலுக்குப் பதிலாக டாக்டர் ஃபைசல் அப்துல் அஸிஸ் நியமிக்கப்படுவார். திரு கென்னி சிம்மின் தொகுதிக்கு திரு டேனியல் லியு பொறுப்பேற்பார். திரு லாய் பொறுப்பு வகிக்கும் தொகுதியின் துணைக் கிளைத் தலைவராக இருக்கும் டாக்டர் ஏட்ரியன் ஆங், திரு லாய்க்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார் என்று கட்சி தெரிவித்தது.
கடந்த ஆறு மாதங்களில் அல்ஜுனிட் குழுத்தொகுதி மசெக கிளைத் தலைமைத்துவத்தில் இடம்பெறும் இரண்டாவது மாற்றம் இது.