அல்ஜுனிட் குழுத்தொகுதியில் புதிய மசெக கிளைத் தலைவர்கள்

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் புதிய மசெக கிளைத் தலைவர்கள்

2 mins read
8982100c-c63a-4f96-ad95-f32ac4fcea89
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு ஜெகதீஸ்வரன் ராஜு (இடது), திரு கெனி சிம். - படங்கள்: மக்கள் செயல் கட்சி

பாட்டாளிக் கட்சியின்கீழ் உள்ள அல்ஜுனிட் குழுத்தொகுதியில் ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக) இரண்டு புதிய கிளைத் தலைவர்களை நியமித்துள்ளது.

தொழிற்சங்கவாதியான 37 வயது ஜெகதீஸ்வரன் ராஜூ, யூனோஸ் கிளைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சீரியல் அச்சீவா எனும் தொழில்நுட்பப் பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான கெனி சிம், 55, பாய லேபார் கிளைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யூனோசில் திரு ஜெகதீஸ்வரன், வங்கி நிர்வாகியான திரு சுவா எங் லியோங்கிடமிருந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். திரு சிம், பாய லேபாரில் வழக்கறிஞரான திரு அலெக்ஸ் இயோவிமிடருந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 12) அறிக்கை ஒன்றில் மக்கள் செயல் கட்சி இத்தகவல்களை வெளியிட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட இவ்விருவரும் அடுத்த பொதுத் தேர்தலில் அல்ஜுனிட்டில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் களமிறக்கப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், திரு சுவா, திரு இயோ இடம்பெற்ற மக்கள் செயல் கட்சிக் குழு, அல்ஜுனிட்டில் எதிர்க்கட்சித் தலைவரான திரு பிரித்தம் சிங் வழிநடத்திய பாட்டாளிக் கட்சிக் குழுவிடம் தோல்வியடைந்தது. இனி அவர்கள் இருவரும், திரு ஜெகதீஸ்வரனும், திரு சிம்மும் புதிய பொறுப்புகளைச் சீரான முறையில் ஏற்றுக்கொள்ளக் கைகொடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு ஜெகதீஸ்வரன், 2009ஆம் ஆண்டிலிருந்து ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் உள்ள ஸெங்ஹுவா கிளையின் மக்கள் செயல் கட்சி ஆர்வலராகப் பணியாற்றி வந்தவர். அங்கு அவர் எட்டு ஆண்டுகளாக கிளைச் செயலாளர் பொறுப்பை வகித்ததாகவும் மக்கள் செயல் கட்சி குறிப்பிட்டது.

வசதி குறைந்த குடும்பங்கள், மூத்தோர் உள்ளிட்டவர்களின் அக்கறைகளுக்குச் செவிமடுத்து அவர்களுக்கு திரு ஜெகதீஸ்வரன் குரல்கொடுத்து வந்ததாக மசெக மேலும் தெரிவித்தது.

தற்போது திரு ஜெகதீஸ்வரன், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் ஊழியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். அதோடு, தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தன்னுரிமைத் தொழிலாளர், சுயத் தொழில் பிரிவின் இணை இயக்குநராகவும் உள்ளார்.

திரு சிம், 2015ஆம் ஆண்டு முதல் உட்லண்ட்ஸ், புக்கிட் தீமா தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி ஆர்வலராக இருந்து வந்தவர். அவர், புக்கிட் தீமா கிளையில் ஆறு ஆண்டுகளாக இணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

தமக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு பற்றி கருத்துரைத்த திரு ஜெகதீஸ்வரன், “அல்ஜுனிட் குழுத்தொகுதியைச் சேர்ந்த மக்கள் செயல் கட்சியின் யூனோஸ் கிளையின் தலைவராக பொறுப்பேற்பதில் பெருமை அடைகிறேன். யூனோஸ் (மக்கள் செயல் கட்சி) குழுவினருடன் இணைந்து வட்டாரவாசிகளுடன் பணியாற்ற ஆவலாக உள்ளேன்,” என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பட்டார்.

தம்மைப் பற்றி பகிர்வதற்காகவும் வட்டாரவாசிகளுடன் மேலும் இணைவதற்காகவும் திரு ஜெகதீஸ்வரன், புதிதாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றைத் தொடங்கவிருப்பதாகவும் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

கூடுதல் செய்தி: கி. ஜனார்த்தனன்

குறிப்புச் சொற்கள்