நீ சூன் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி (மசெக) ஏற்படுத்திய முன்னேற்றங்கள், வட்டாரம் அடைந்துள்ள மேம்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தியே பொதுத் தேர்தல் 2025ஐச் சந்திக்கவுள்ளதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
வாக்களிப்பு நாள் நெருங்கும் வேளையில், கட்சிகள் மக்களின் வாக்குகளை வெல்ல தங்கள் தொகுதி உலாக்களை தீவிரப்படுத்தியுள்ளன.
அவ்வகையில் நீ சூன் குழுத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை காலை (ஏப்ரல் 22) மசெக வேட்பாளர்கள் ஐவரும் தொகுதி உலா மேற்கொண்டனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹருன் அல்ஹப்ஷி, தெமாசெக் அறக்கட்டளை இயக்குநர் லீ ஹுவேய் யிங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் இயக்குநர் கோ ஹன்யான், நீ சூன் குழுத்தொகுதிக் கிளைச் செயலாளர் ஜாக்சன் லாம் ஆகிய நால்வரும் அமைச்சர் சண்முகத்தின் தலைமையில் களமிறங்குகின்றனர்.
இந்தப் பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியை அமைச்சர் சண்முகம் தொடர்ந்து வழிநடத்தவுள்ளார்.
புதியவர்களுடன் தேர்தல் களத்தைச் சந்திப்பது குறித்துப் பேசிய திரு சண்முகம், “புதுமுகங்கள் நால்வரும் திறமைசாலிகள். அவர்களால் மக்களின் எதிர்பார்ப்புகளைக் கட்டாயம் நிறைவேற்ற முடியும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“ஏறத்தாழ 40 ஆண்டுகளாக இவ்வட்டாரத்தில் மசெக பணியாற்றி வருகிறது. மக்கள் அடைந்துள்ள முன்னேற்றங்கள், தொகுதி அடைந்துள்ள மேம்பாடுகள் ஆகியவற்றை மக்கள் நன்கறிவர்.
“கட்சியின் தலைமை ஒரு முடிவை எடுத்தால் அது சரியாக இருக்கும் என்று குடியிருப்பாளர்கள் கருதும் அளவிற்கு அவர்களின் நம்பிக்கையை மசெக பெற்றுள்ளது,” என்றார் அமைச்சர் சண்முகம்.
தொடர்புடைய செய்திகள்
உலகச் சூழலைப் பார்த்துக் கலங்கி நிற்கமாட்டோம்: சண்முகம்
இதுவரை இல்லாத அளவில் உள்ளூர்த் தேர்தலில் உலகப் பிரச்சினைகளையும் முக்கியப் பங்காக வைத்துக் கட்சிகள் போட்டியிடவுள்ள சூழலைக் குறித்துத் தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார் திரு சண்முகம்.
“வெளிநாட்டுப் பொருளியல் உள்நாட்டுப் பொருளியலைவிட மூன்று மடங்கு பெரியது. அதனால் வெளிநாட்டில் என்ன நடந்தாலும் அது உள்ளூர்ச் சூழலைப் பாதிக்கும். உலக அரங்கில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறத்தாழ 25 விழுக்காடு.
“சூழல் இப்படியிருக்க இவ்வளவு பெரிய நாடு, வெளிநாட்டிலிருந்து வரும் பொருள்களுக்கு வரி விதிக்கிறது. இதனால் வர்த்தகங்கள் பாதிக்கக்கூடும்.
“90 நாள்களுக்குத் தற்காலிகமாக வரிவிதிப்பு நிறுத்தப்பட்டிருந்தாலும் பிறகு என்ன நடக்கும் என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் புதிய ஆள்களை அமர்த்தவில்லை. கொள்முதல் பட்டியல்கள் எடுக்கப்படவில்லை. இருப்போரையும் மறுசீரமைப்பு செய்ய முயல்கின்றனர். இன்னும் ஆறு அல்லது ஒன்பது மாதங்களில் இது சிரமமாகவும் உருவெடுக்கலாம் அதைக் கவனத்தில் கொண்டுதான் பிரதமர் இதுகுறித்துப் பேசியுள்ளார். அதன் தொடர்பில் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது,” என்று விவரித்தார் திரு சண்முகம்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “உலக அரங்கில் நடந்தேறும் வரி விதிப்பு சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கலங்கி நிற்கமாட்டோம். அவற்றை எதிர்கொள்ளத் தேவையான உத்திகளும் நிதிக் கையிருப்பும் நல்லவேளையாக நம்மிடம் உள்ளன”, என்றார்.
கடந்த தேர்தலில் உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம், திரு லூயிஸ் இங், திரு டெரிக் கோ, திருவாட்டி கேரி டான் ஆகியோர் திரு சண்முகத்துடன் மசெக வேட்பாளர்களாக நீ சூன் குழுத் தொகுதியில் களமிறங்கினார்கள்.
அவர்கள் நால்வரும் தனிப்பட்ட, குடும்பம் மற்றும் கற்றல் சார்ந்த பல்வேறு காரணங்களுக்காக இம்முறை நீ சூன் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.