தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுத் தேர்தலில் அதிக இளையர்கள், பெண்களை மசெக களமிறக்கக்கூடும்

2 mins read
4670bf1c-d5b7-4f13-8eac-0e7f0ab87cf2
அடுத்த பொதுத் தேர்தலில் கூடுதல் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிட்டிருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார். - கோப்புப் படம்: இபிஏ

இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக) 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆக அதிக எண்ணிக்கையில் இளம் வேட்பாளர்களைக் களமிறக்கக்கூடும் என்று அறியப்படுகிறது.

அதோடு, மசெகவின் வேட்பாளர்களில் இம்முறை கூடுதல் பெண்கள் இடம்பெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் மசெக 30 புதுமுகங்களைக் களமிறக்கக்கூடும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

அவர்களில் அரசாங்க ஊழியர்கள், நிறுவனங்களில் உயர் தலைமைப் பொறுப்புகளை வகிப்போர், நீண்டகாலத்துக்கு அடித்தளத் தலைவர்களாக இருந்தோர் ஆகியோர் அடங்குவர்.

ஒவ்வொரு தவணைக்காலத்திலும் தங்களின் வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அல்லது கால் பங்கினரை மாற்றுவது மசெகவின் வழக்கமாக இருந்துவருகிறது.

அதற்கேற்றவாறு இம்முறையும் மசெக வேட்பாளர்களில் மாற்றங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுறது.

சிங்கப்பூரின் அடுத்த அரசாங்கத்தில் 97 வாக்களிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவர். அந்த வகையில், மசெக, 24லிருந்து 32 புதுமுகங்களை அடுத்த பொதுத் தேர்தலில் களமிறக்கக்கூடும்.

மசெகவின் தலைமைச் செயலாளரும் சிங்கப்பூர் பிரதமருமான லாரன்ஸ் வோங், கட்சியில் பதவி வகிப்போரிடையே மாற்றங்கள் செய்துப் புத்துயிர் ஊட்டுவதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

மசெகவின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு தாம் ஆற்றிய முதல் உரையில் சிங்கப்பூரின் நிதி அமைச்சருமான திரு வோங் அவ்வாறு சொன்னார்.

வரும் பொதுத் தேர்தலில் கூடுதல் பெண்களைக் களமிறக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பொதுத் தேர்தலில் மசெக களமிறக்கும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்திருப்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்துள்ளது.

அந்தப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து மசெக, முந்தைய ஆண்டுகளில் காணப்பட்டதைவிடவும் இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் கூடுதலான பெண் வேட்பாளர்களைக் களமிறக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அதோடு, மசெக சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட தனியார்த் துறை, அரசாங்கத் துறை என இருதரப்பினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது; இருதரப்பு வேட்பாளர்களுக்கும் பிரித்து வாய்ப்பளிக்கப்படுவதில் அதிக வித்தியாசம் இல்லாது இருந்துவந்துள்ளது.

மேலும், இவ்வாண்டுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய மசெக வேட்பாளர்கள், பொதுவாக முன்பு களமிறக்கப்பட்டோரைவிட வயது குறைந்தவர்கள். இவ்வாண்டுப் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் சராசரி வயது 40.

இவ்வாண்டு போட்டியிடக்கூடிய மசெக வேட்பாளர்களில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் பெண்கள். அப்படியென்றால் மேலும் 12 பெண்கள் 2025 பொதுத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடும்.

2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மசெக வேட்பாளர்களில் 37 விழுக்காட்டினர் பெண்கள். 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மசெக வேட்பாளர்களில் கால் பங்குக்கும் குறைவானவர்களே பெண்கள்.

குறிப்புச் சொற்கள்