கடுமையான போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கி, ஆளும் மக்கள் செயல் கட்சி பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ளது.
மொத்தமுள்ள 97 இடங்களில் மசெக 87 இடங்களில் வெற்றி பெற்றது.
பாட்டாளிக் கட்சி கடந்த முறை வென்ற அதே பத்து இடங்களைத் தக்கவைத்துக்கொண்டது. தெம்பனிஸ் குழுத் தொகுதி, ஜாலான் காயு தனித்தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதால் இரு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் அக்கட்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றி, பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் மசெக நான்காம் தலைமுறைத் தலைவர்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி; மக்கள் அளித்திருக்கும் அங்கீகாரம்.
மசெகவிற்கு 65.57% வாக்குகள் கிடைத்தன. இது கடந்த தேர்தலைவிட 4 விழுக்காட்டுப் புள்ளிகளுக்குமேல் அதிகம்.
மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் வோங் தலைமையிலான மசெக அணி 73.46 விழுக்காட்டு வாக்குகளுடன் வெற்றியைச் சுவைத்தது.
அத்தொகுதிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் இயோ சூ காங் விளையாட்டரங்கில் திரண்டிருந்த மசெக ஆதரவாளர்கள்முன் பேசிய பிரதமர், “மக்களின் வலுவான ஆதரவிற்கு நன்றிக்கடன்பட்டிருப்போம். எங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து, மக்களுக்காக இன்னும் கடுமையாக உழைப்போம்,” என்றார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கோல், ஈஸ்ட் கோஸ்ட், தெம்பனிஸ் ஆகிய குழுத்தொகுதிகளில் கடும் போட்டிக்கு இடையே மசெக வாகை சூடியது.
கடைசி இருநாள்களில் திரு வோங்கும் அவரது குழுவினரும் புயலாகச் சுழன்று மேற்கொண்ட பிரசாரத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது.
இம்முறை மொத்தம் 97 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் இருந்த நிலையில், 92 இடங்களில் போட்டி நிலவியது.
பதினொரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 204 பேர், சுயேச்சையாக இருவர் என மொத்தம் 206 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
18 குழுத்தொகுதிகள், 15 தனித்தொகுதிகள் என மொத்தம் 33 தொகுதிகளிலும் மசெக வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. ஐந்து உறுப்பினர் குழுத்தொகுதிகளில் ஒன்றான மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் எக்கட்சியும் எதிர்த்துப் போட்டியிடாததால் மசெக வேட்பாளர்கள் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டனர்.
அதற்கு அடுத்தபடியாக, பாட்டாளிக் கட்சி ஐந்து குழுத்தொகுதிகள், மூன்று தனித்தொகுதிகள் என எட்டுத் தொகுதிகளில் 26 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நான்கு தனித்தொகுதிகள் உட்பட ஆறு தொகுதிகளில் 13 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
சீர்திருத்த மக்கள் கூட்டணி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி ஆகியனவும் களத்தில் இருந்தன.
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவியது. அங் மோ கியோ, செம்பவாங் குழுத்தொகுதிகளிலும் பொத்தோங் பாசிர், ராடின் மாஸ் தனித்தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி காணப்பட்டது.
மொத்தம் 1,240 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சனிக்கிழமை (மே 3) நடந்த தேர்தலில் 92.47% வாக்குகள் பதிவாயின.
இரவு 8 மணிக்கு வாக்களிப்பு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின.
பின்னிரவு 2 மணியளவில் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
ஒன்பது நாள் தேர்தல் பிரசாரத்தில் பொருள் சேவை வரி உயர்வு, விலையேற்றம் உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டன. அரசாங்கம் ஒருதலைபட்சமாக முடிவெடுக்காமல் இருக்கவும், நாடாளுமன்றத்தில் மாற்றுக் கருத்துகள் ஒலிக்கவும், சமநிலை பேணப்படவும் எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடங்கள் வேண்டும் என்ற கருத்தை அவை மக்கள்முன் வைத்தன.
பிரசாரத்தில் எதிர்க்கட்சிகளின் உரத்த குரலும் கவர்ச்சிகரமான விவாதங்களும் ஈர்ப்பவையாக இருந்தபோதும், சோதனை முயற்சியில் இறங்க மக்கள் தயாராக இல்லை.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கொள்கைகளால் உலகப் பொருளியல் ஆட்டம் கண்டிருக்கிறது. மந்தநிலை அதோ இதோ என்று எட்டிப் பார்க்கிறது. விலைவாசி ஏற்றத்தால் ஏற்கெனவே கவலையில் ஆழ்ந்துள்ள மக்கள், நிலைமை இன்னும் மோசமானால் வேலைகள் இருக்குமா என்ற எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். மக்களுக்குத் தேவை உடனடித் தீர்வு, உறுதி.
அதனை ஆளும் அரசாங்கத்தால்தான் தரமுடியும் என்று மக்கள் நினைப்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதற்கேற்ப, மக்களுக்காக இன்னும் கடுமையாக உழைப்போம் என்று மசெக உறுதிகூறியுள்ளது.