சிங்கப்பூர் அரசியலில் எதிர்க்கட்சி நிரந்தர இடம்பிடித்துள்ள நிலையில், குடியரசு தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட, ஆளும் கட்சி தனது நிலையைத் தக்க வைத்துக்கொண்டு வாக்காளர்களின் ஆதரவை வென்றெடுக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
இல்லாவிடில், சிங்கப்பூரைச் சிறப்பாக நிர்வகிப்பதும், நாட்டின் முன்னேற்றத்துக்கான கொள்கைகளுக்கு ஆதரவைப் பெறுவதும் கடினமாகிவிடும் என்றார் அவர்.
சனிக்கிழமை (ஜூலை 26), சிராங்கூனில் நடைபெற்ற தேசிய தின விருந்தில் பேசிய திரு லீ, மக்கள் செயல் கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து நன்முறையில் செயல்பட்டுவருவதாகவும், சிங்கப்பூரர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
“அதே நேரத்தில், இத்தனை ஆண்டுகால அமைதி, செழிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் மாற்றுக் குரல்களுக்கான விருப்பம் வலுவடைந்துள்ளது,” என்றும் மூத்த அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கூடியிருப்பதைச் சுட்டிய திரு லீ, இந்த உணர்வு மிகவும் இயல்பானது என்று தாம் கருதுவதாகவும் இது புரிந்துகொள்ளக்கூடியது என்றும் சொன்னார்.
பொதுத் தேர்தல் 2025ஐ தொடர்ந்து, செப்டம்பர் 5ஆம் தேதி முதல்முறையாகக் கூடவுள்ள சிங்கப்பூரின் 15வது நாடாளுமன்றத்தில், தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடம்பெறுவர்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் எதிர்க்கட்சி 12 இடங்களைப் பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதன் தொடர்பில் தமது அணுகுமுறை குறித்து பேசிய திரு லீ, அரசாங்கம் தொடர்ந்து வலுவாகத் திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இல்லாவிடில், அரசாங்கத்தின் தரம் குறையும் என்றும் நாட்டின் வருங்காலம் பாதிக்கப்படும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
வலுவான மாற்றுக்குரல்களைப் பெற்றிருப்பதற்கும் செயல்திறன் மிக்கவர்களை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுப்பதற்கும் இடையில் சரியான சமநிலையைப் பேண வேண்டும் என்று மூத்த அமைச்சர் குறிப்பிட்டார்.