அண்மைய மாதங்களாக பொதுவெளியில் அதிகம் தென்பட்ட மக்கள் செயல் கட்சியின் புதுமுகங்கள் இப்போது வேறு தொகுதிகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர்.
தொழில்முனைவர் சுவா வெய் ஷான், செம்ப்கார்ப் நிறுவனத்தின் வெலரி லீ நை யி, ‘மெஜுரிட்டி டிரஸ்ட். எனும் அறநிறுவன இயக்குநர் டேவிட் ஹோ ஆகியோரே அம்மூவர்.
தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டால், சுவா சூ காங்கில் திருவாட்டி சுவாவும், ஈஸ்ட் கோஸ்ட்டில் திருவாட்டி லீயும், தெம்பனிசில் திரு ஹோவும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மசெக இளையரணியின் ஏற்பாட்டுச் செயலாளரான திருவாட்டி சுவா, 2024 ஜனவரியில் அக்கட்சியின் வெஸ்ட் கோஸ்ட் கிளையின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், இப்போது அவரைச் சுவா சூ காங் குழுத்தொகுதி நிகழ்ச்சிகளில் அதிகம் காண முடிகிறது.
மார்ச் 9ஆம் தேதி அங்கு நடந்த குறைந்த வருமானக் குடியிருப்பாளர்களுக்கான இலவச உணவுத் திட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாம் அடித்தள அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அடித்தள அமைப்பு உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் திருவாட்டி சூ ஊடகங்களிடம் கூறினார்.
அவரைப் போன்றே, 39 வயதான திருவாட்டி லீயும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியிலிருந்து சிங்கப்பூரின் கிழக்குப் பகுதிக்கு மாறிவிட்டதுபோல் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, அவர் திருவாட்டி ஃபோ மீ ஹாரின் ஆயர் ராஜா - கெக் போ தொகுதியில் துடிப்புடன் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்குடன் காசிம் பள்ளிவாசல் நிகழ்வில் பங்குகொண்டது குறித்த பல படங்களை வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 14) அவர் தமது சமூக ஊடகப் பக்கம் வழியாகப் பகிர்ந்துகொண்டார். அப்பள்ளிவாசல், திரு டோங் எம்.பி.யாக இருக்கும் தொகுதிக்குட்பட்ட கெம்பாங்கானுக்கு அருகே உள்ளது.
இதனிடையே, இப்போதெல்லாம் தெம்பனிசில் திரு ஹோவைக் காண முடிகிறது.
முதன்முதலாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாலான் புசார் குழுத்தொகுதியில் இடம்பெற்ற தொகுதி உலாவின்போது திருவாட்டி டெனிஸ் புவாவுடன் அவரைப் பார்க்க முடிந்தது.
ஆனால், இவ்வாண்டு பிப்ரவரியில் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியுடன் தெம்பனிஸ் குழுத்தொகுதி நிகழ்வு ஒன்றில் அவர் கலந்துகொண்டார்.
இந்நிலையில், சனிக்கிழமை அத்தொகுதியில் இடம்பெற்ற குடியிருப்பாளர்களுக்கான உதவித் திட்ட நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றார்.
தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு இம்மாதம் 11ஆம் தேதி தனது அறிக்கையைச் சமர்ப்பித்ததை அடுத்து, கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இறுதிசெய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

