வெற்றிபெற்ற நாடாக, அனைவரையும் உள்ளடக்கிய நல்லிணக்கமிக்க நாடாகிய சிங்கப்பூரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை மக்களிடமே உள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
மே 3ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்காக கடந்த ஒன்பது நாட்களாக புயலாக தொகுதி தொகுதியாகச் சென்ற திரு வோங், பொங்கோலில் தமது பிரசாரத்தை நிறைவுசெய்து பேசினார்.
மக்கள் செயல் கட்சிக்கு தலைமையேற்று ஆறு மாதமே ஆகியுள்ள நிலையில், 32 புதிய வேட்பாளர்களுடன் தேர்தலை வழிநடத்தும் திரு வோங், சிங்கப்பூரர்கள் தமக்கு முழு ஆதரவைத் தருவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார்.
சுதந்திர சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த 52 வயது திரு வோங், மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேலே அரசியலுக்கு வந்ததாகச் சொன்னார். பிரதமராக பொறுப்பேற்று ஓராண்டு ஆகிறது. இன்னும் சிறப்பான அத்தியாயம் இனிதான் வரவுள்ளது என்றார்.
அதிக அரசியல் வேண்டுமா அல்லது பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகள் வேண்டுமா என்ற திரு வோங், எத்தகைய சூழலிலும் மக்களுக்காக மக்களுடன் மசெக துணைநிற்கும் என்று உறுதியளித்தார்.
“மக்கள் செயல் கட்சி உள்பட எந்தவொரு கட்சியும் குறையில்லாத கட்சியாக இருக்க முடியாது. தவறுகள் நேரலாம். ஆனால், மசெக தவறுகளுக்குப் பொறுப்பேற்கும். தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும், தொடர்ந்து மேம்பாடு காணும் இதுவே மசெகவின் பாணி,” என்ற திரு வோங், எந்த வளங்களுமே இல்லாமல் மூன்றாம் உலக நாடாக இருந்த சிங்கப்பூரை மசெக அறுபதே ஆண்டுகளில் உலகின் முதல் தர நாடாக எப்படிக் கட்டி எழுப்பியது என்பதை உணர்ச்சிபொங்க விவரித்தார்.
வியாழக்கிழமை காலையில் மே தினப் பேரணியில் தொடங்கிய அவரது பிரசாரப் பயணம் கிட்டத்தட்ட இரவு 10 மணி வரையில் நீடித்தது. ஓயாது பிரசாரம் செய்தபோதும் அசராத அவரது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அவரது உரையில் பளிச்சிட்டது.
இரவு ஏழு மணிக்கு மேல் முதலில் செங்காங் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற திரு வோங், சில நிமிடங்களில் தமது உரையை முடித்துக்கொண்டு பொங்கோல் குழுத்தொகுதிக்கான பிரசாரக் கூட்டத்திற்கு விரைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கு “ஒரேயொரு லீ குவான் யூதான்’ என்று அவர் உரத்து முழுங்கியபோது பெருத்த கரவொலியால் பிரசாரத் திடலே அதிர்ந்தது.
யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் திரண்டிருந்த பெருங்கூட்டம் அமைதியான பிரதமரின் மறுபக்கத்தைக் கண்டு ஆர்ப்பரித்தது.
சிங்கப்பூரின் இந்த வெற்றி டாலர்களால் உருவானது அல்ல. மக்கள் கனவு, கடும் உழைப்பு, வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி, அர்ப்பணிப்பால் உருவானது.
இந்த வெற்றி தொடரவேண்டும். மாறிவிட்ட உலகத்தில் சிங்கப்பூர் புதிய சூழலை எதிர்கொள்கிறது. நிலையற்ற பொருளியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில் வாழ்க்கைச் செலவினமும் மக்களின் வேலைகளைத் தக்க வைப்பதுமே அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
நாட்டை ஆளும் கட்சி முக்கியம், வேட்பாளர்கள் முக்கியம் என்ற பிரதமர், மசெக அணி வெற்றிபெற்றால் புத்தாக்கமிக்க தீர்வுகள் மக்கள் வாழ்வினை வளப்படுத்தும் என உறுதிகூறினார்.
“இந்தத் தேர்தலில் பொங்கோல் உள்பட பல்வேறு குழுத்தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகின்றன. ஒருவேளை அவர்கள் வென்றால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் வருகை இருக்கும். ஆனால் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் உங்களின் எதிர்க்காலத் தலைவர்களாக இருப்பார்களா? ஏற்கெனவே திரு தர்மன், திரு டியோ, திரு ஹெங், திரு இங் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நான்கு உறுப்பினர்கள் என் குழுவிலிருந்த வெளியேறிய நிலையில், இன்னும் நான்கு அமைச்சர்களை இழந்தால் என்னவாகும் என்று என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் முன்வைத்தார் திரு வோங்.
மக்களின் முழு ஆதரவுடன், வலுவான அரசாங்கத்தை அமைத்து, நாட்டை தொடர்ந்து வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல தமது மசெக அணிக்கு கைகொடுக்குமாறு மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

