தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய அத்தியாயத்தை நோக்கி மசெக; 38வது மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு

2 mins read
14759399-ce26-4b8a-ad3c-687f824f0b97
மக்கள் செயல் கட்சியின் 38வது மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாநாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24), புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் 38வது மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் உயர்மட்ட அளவிலான முடிவுகளை எடுக்கும் அக்குழுவில் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், திரு கா.சண்முகம், திரு. மசகோஸ் ஸுல்கிஃப்லி, திரு. சான் சுன் சிங், திரு டெஸ்மண்ட் லீ, திரு ஓங் யி காங், திருவாட்டி கிரேஸ் ஃபூ, திரு எட்வின் டோங், குமாரி இந்திராணி ராஜா, திரு. விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கட்சி நிர்வாகிகளால் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

19 பேர் கொண்ட ஆரம்பப் பட்டியலிலிருந்து ரகசிய வாக்கெடுப்பு மூலம் மசெகவின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

திரு சீ ஹொங் டாட், டாக்டர் டான் சீ லெங் ஆகியோர் கட்சியினரின் அதிகப்படியான வாக்குகளுடன் முறையே 13வது, 14வது இடத்தைப் பெற்றனர். திரு சீ செயற்குழுவில் இடம்பிடித்து இதுவே முதல் முறை. இதனிடையே இவ்விருவரையும் கட்சியின் செயற்குழுவில் இணைக்க 38வது மத்திய செயற்குழுவிற்காகத் தேர்வு செய்யப்பட உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆளும் மக்கள் செயல் கட்சி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநாட்டில் தனது செயற்குழுவைத் தேர்வு செய்வது வழக்கம்.

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்கள் மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆர்வலர்களுடனும் இணைந்து பணியாற்றுவர் என்றும் சவால்களைச் சந்தித்து, சிங்கப்பூரை வழிநடத்த மசெக-தான் சரியான தேர்வு என்று மக்களை நம்பச்செய்யும் வகையில் அவர்கள் தொடர்ந்து திறம்படச் செயலாற்றுவர் என்றும் அக்கட்சியின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்