டெஸ்மண்ட் லீ தலைமையில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி மசெக அணி

3 mins read
10c03874-9c29-4d92-afec-886d6173e9d8
(இடமிருந்து) எம்.பி. ஃபூ மீ ஹார், நிதி, கல்வி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங், டாக்டர் ஹமீது ரசாக், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, திருவாட்டி கசேண்ட்ரா லீ, எம்.பி. பேட்ரிக் டே, எம்.பி. ஆங் வெய் நெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதிக்கான வேட்பாளர் குழுவை மக்கள் செயல் கட்சி (மசெக்) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) அறிமுகம் செய்தது.

அதன்படி, அக்குழுத்தொகுதியில் மசெக சார்பாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, முடவியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஹமீது ரசாக், திரு ஆங் வெய் நெங், திருவாட்டி கசேண்ட்ரா லீ, திரு ஷான் ஹுவாங் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். 

அமைச்சுகளுக்கான நாடாளுமன்றச் செயலாளர், மும்முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் மற்றும் இரு புதுமுகங்களுடன் கூடிய மசெக வேட்பாளர் குழுவை அக்கட்சியின் வெஸ்ட் கோஸ்ட் கிளை அலுலவலகத்தில் அமைச்சர் லீ அறிமுகம் செய்தார்.  

அவர்களில் டாக்டர் ஹமீது, 39, வழக்கறிஞர் திருவாட்டி லீ, 33, இருவரும் புதுமுகங்கள்.

திரு ஷான், 42, கல்வி, நிதி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளராவார். திரு ஆங், 58, மும்முறை நாடாளுமன்ற உறுப்பினராவார்.

திரு ஆங், 2020லிருந்து வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் நன்யாங் தொகுதியைப் பிரதிநிதிக்கிறார். 2011, 2020க்கு இடைப்பட்ட முந்தைய இரண்டு தவணைகளில் ஜூரோங் குழுத்தொகுதியின் ஜூரோங் சென்ட்ரலை அவர் பிரதிநிதித்தார்.

வேட்பாளர்களின் அறிமுகத்தை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லீ 48, கட்சியின் திட்டங்களைத் தொடர்ந்திடவும், கடந்த சில ஆண்டுகளாக தொடங்கிவைத்து நடப்பிலுள்ள திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவும் குடியிருப்பாளர்களின் ஆதரவை நாட விரும்புவதாகக் கூறினார்.

வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி மசெக அணியில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறவுள்ள நிலையில், மசெகவுக்கும் 2020 தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் மசெகவை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும் இடையே வரும் தேர்தலில் கடும் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங், செய்தியாளார் சந்திப்பில் காணப்படவில்லை. அவருக்கு தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இடமளிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1997ல் உருவாக்கப்பட்ட வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியை முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வழிநடத்தினார்.

அன்பளிப்பு பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கையடுத்து ஈஸ்வரன் பதவி விலகினார். அக்குற்றச்சாட்டின் தொடர்பில் அவருக்கு கடந்த ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .

இதற்கிடையே, மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ மீ ஹர் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றபோதும், மசெக வேட்பாளராக இத்தொகுதியில் அவர் களமிறக்கப்படவில்லை. 

அவரின் ஆயர் ராஜா - கெக் போ தொகுதியை திருவாட்டி லீயும் டாக்டர் ஹமீதும் முன்னெடுத்துச் செல்வர் என்று திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்.

பொதுச் சேவை, தனியார் துறையில் அனுபவமிக்கவரான வழக்கறிஞர் திருவாட்டி லீ, மூத்தோர், இளம் குடும்பங்கள், பெண்கள் மேம்பாடு உள்ளிட்டவற்றின் ஆர்வலர் எனவும் 16 ஆண்டுகளாக தொண்டூழியம் செய்து வருவதாகவும் திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.

மிகுந்த மதிப்பிற்குரியவரான டாக்டர் ஹமீது, சமூகத்தில் 17 ஆண்டுகளாக மிகவும் துடிப்புடன் செயலாற்றி வருவதாக திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்

திருவாட்டி ஃபூவின் பங்களிப்புக்கு நன்றி கூறிய அமைச்சர் லீ, திருவாட்டி ஃபூ அரசியலில் இருந்து ஒய்வுபெறுகிறாரா என்பதை உறுதிசெய்யவில்லை.

இதற்கிடையே, மசெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் ஹமீது, தமது அரசியல் பயணம் குறித்த தமிழ் முரசின் கேள்விகளுக்கு, இளையர்கள், மூத்தோர் உள்ளிட்ட குடிமக்களின் கனவை நனவாக்கும் இலக்குடன் அயராது செயலாற்றவுள்ளதாக தெரிவித்தார்.

“மருத்துவத் துறையில் சிகிச்சையளிக்கப்படும். இங்கு மக்கள் கொண்டுவரும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு பல்வேறு முயற்சிகள், உதவிகளுடன் அவற்றைத் தீர்த்துவைக்க இயலும். ஈராண்டுகளாக ஜூரோங் ஸ்பிரிங் பகுதியில் சேவையாற்றி வருகிறேன். மக்கள் வாய்ப்பளித்தால் கெக் போவிலும் சேவையைத் தொடர்வேன்,” என்றார் டாக்டர் ஹமீது.

குறிப்புச் சொற்கள்