சுவா சூ காங் குழுத்தொகுதியை இந்தப் பொதுத் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சி தக்கவைத்துள்ளது. மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தலைமையில் களமிறங்கிய மக்கள் செயல் கட்சி அணி 63.59% வாக்குகளை வென்றது.
அதை எதிர்த்து இரண்டாவது முறை போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி இந்த முறை 36.41% வாக்குகளைப் பெற்றது.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியை எதிர்த்து சுவா சூ காங் குழுத்தொகுதியில் களமிறங்கியது. அப்போது கட்சி 58.64% வாக்குகளைப் பெற்றது.
நான்கு உறுப்பினர் கொண்ட சுவா சூ காங் குழுத்தொகுதியில் புதிய முகங்கள் ஜெஃப்ரி சியாவ், சூ பெய் லிங் ஆகியோருடன் இரண்டாவது தவணைக் காலத்துக்கு சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்த திரு ஸுல்கர்னைன் பின் அப்துல் ரஹீம் டாக்டர் டானுடன் போட்டியிட்டனர்.
வாக்கு முடிவுகள் வெளியானதை அடுத்து ஆதரவாளர்களிடம் பேசிய டாக்டர் டான், “இத்தனை ஆண்டுகள் இங்குச் சேவையாற்றிய துணைப் பிரதமர் கானுக்கு நாம் அனைவரும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஆதரவுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்,” என்றார்.
சுவா சூ காங் குழுத்தொகுதியில் 14 ஆண்டுகள் சேவையாற்றிய துணைப் பிரதமர் கான் கிம் யோங், வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று பொங்கோல் குழுத்தொகுதிக்கு மாற்றப்பட்டார்.
மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் டான், சுவா சூ காங் குழுத்தொகுதிக்கு மாற்றப்பட்டார்.
“டாக்டர் டான் இங்குச் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளேன்,” என்றார் சுவா சூ காங் குழுத்தொகுதி குடியிருப்பாளர் வந்தனா, 47.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் முடிவுகளை அறிவித்த பிறகு சுவா சூ காங் குழுத்தொகுதி வேட்பாளர்கள், புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கில் ஆதரவாளர்களைச் சந்தித்தனர்.

