தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) கொந்தளிப்பான சூழலில் தொழிலாளர்களைப் பாதுகாத்து பணிநீக்கத்தைக் குறைத்ததாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
என்டியுசியின் மே தினப் பேரணி உரையில் வியாழக்கிழமை (மே 1) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய பிரதமர் வோங் அவ்வாறு கூறினார்.
இதற்கு முன்னர் மே தினப் பேரணிகளில் பேசியிருந்தாலும் திரு வோங் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இப்பேரணியில் உரையாற்றினார்.
டௌன்டவுன் ஈஸ்ட்டில் உள்ள டி’மார்கி அரங்கில் இடம்பெற்ற பேரணியில் தொழிற்சங்கத் தலைவர்கள், முத்தரப்புப் பங்காளிகள் என 1,600 பேர் கலந்துகொண்டனர்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், அவருடைய மனைவி ஹோ சிங், பிரதமர் வோங்கின் மனைவி, என்டியுசி தலைவர் கே.தனலெட்சுமி, என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் உள்ளிட்டொர் பேரணிக்கு வருகை புரிந்தனர்.
பிரசாரக் கூட்டங்களின் கடைசி நாள் வியாழக்கிழமை என்பதை தமது உரையில் சுட்டிய பிரதமர் வோங், தொழிலாளர் இயக்கத்தினர், மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர்கள் உட்பட அனைவரும் கடுமையாக உழைத்து வருவதாகச் சொன்னார்.
இந்த ஆண்டு எஸ்ஜி60 ஆண்டு என்று கூறிய நிதி அமைச்சருமான பிரதமர் வோங், சிங்கப்பூர் 60 ஆண்டுகளாகக் கடந்துவந்த சவால்களை நினைவுகூர்ந்தார்.
“மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. இருந்தாலும், வருங்காலம் சுமுகமாக இருக்காது. நாடுகளுக்கிடையே பதற்றநிலை அதிகரித்துள்ளது. இது சிங்கப்பூருக்கு அதிக அழுத்தம் தரும்,” என்று பிரதமர் வோங் எச்சரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறிப்பிட்ட பிரதமர் வோங், இப்பொதுத் தேர்தலில் மசெக முக்கிய அமைச்சர்களை இழக்க நேரிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றார்.
“எதிர்க்கட்சியினர் இதை ஒரு பொருட்டாகப் பார்ப்பதில்லை. அமைச்சரவையில் அப்படியோர் இழப்பு ஏற்பட்டால் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது,” என்றார் பிரதமர் வோங்.
நிச்சயமற்ற சூழலால் நிறுவனங்கள் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்ன பிரதமர் வோங், இந்த நிலை பல நாள் நீடிக்கலாம் என்று எச்சரித்தார்.
“ஏற்கெனவே நிலவும் சவால்களுக்கிடையே இன்னும் அதிகச் சவால்கள் எழும். உயரும் வாழ்க்கைச் செலவினம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்,” என்றார் பிரதமர் வோங்.
இதனாலேயே தேர்தலைத் தாம் மிகவும் கடுமையாகக் கருதுவதாகச் சொன்ன பிரதமர் வோங், இதர உலகத் தலைவர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி பங்காளித்துவதை வலுப்படுத்துவதாகச் சொன்னார்.
“துணைப் பிரதமர் கான் கிம் யோங், வர்த்தக சகாக்களோடு பேசி வருகிறார். இதன்மூலம் நமக்கு வலுவான முதலீடுகள் கிடைக்கும்,” என்றார் பிரதமர் வோங்.
ஒரு பிரச்சினை ஏற்பட்டால் மசெக அரசாங்கம் அதை உடனடியாகத் தீர்க்கும் வலிமைகொண்டது என்ற அவர், இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு உதவும் வகையில் இருப்பதாகச் சொன்னார்.
சவால்களுக்கிடையே ஏற்படும் வாய்ப்புகள் பற்றிப் பேசிய அவர், ஆசிய நாடுகளும் சில மத்திய கிழக்கு நாடுகளும் பொருளியல் ரீதியாக வேகமாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். ஆசியாவுக்கு அப்பாற்பட்டு லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்காவுடன் கைகோக்கலாம் என்றார் அவர்.
“ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் தூரமாக இருந்தாலும் சிங்கப்பூர் அங்கு நன்கு அறியப்பட்ட நாடு. அவற்றுடன் இணைந்து நாம் அதிகம் செயல்படலாம். புதிய வாய்ப்புகளைத் தேடலாம்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அப்பாற்பட்டு சிங்கப்பூர் நிறுவனங்களும் மறுகட்டமைத்து உருமாற உதவி அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல அரசாங்கத் திட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு என்டியுசி கைகொடுத்து வருவது மகிழ்ச்சி என பிரதமர் வோங் சொன்னார்.
“மற்ற நாடுகளில் தொழிற்சங்கங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் இடையே சச்சரவு நீடிக்கிறது. ஆனால், சிங்கப்பூரில் அப்படியில்லை,” என்றார் அவர்.
நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் வோங், ஊழியர்கள் புது திறன்களை வளர்த்துக்கொள்ள அவை ஏதுவாக இருப்பதாகச் சொன்னார்.
வரவுசெலவுத் திட்டத்தின்போது நிதியுதவி வழங்கும் வகையில் நிறுவனப் பயிற்சிக் குழுக்களுக்கு தாம் கூடுதலாக $200 மில்லியன் வழங்கியுள்ளதை பிரதமர் வோங் சுட்டினார்.
இன்று 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உதவும் வகையில் 3,000க்கும் மேற்பட்ட நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் இருப்பதாக சொன்ன அவர், உயர்கல்விக் கழகங்களிலிருந்து வரும் புதிய பட்டதாரிகள் பற்றியும் பேசினார்.
வேலை கிடைப்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்திய பிரதமர் வோங், அரசாங்க ஆதரவு எப்போதும் இருக்கும் என்று நம்பிக்கை அளித்தார்.
நடுத்தர தொழில் மாற்றம் செய்பவர்கள், மூத்தோருக்கான வேலைவாய்ப்புகள் பற்றிப் பேசிய அவர், மசெகவும் என்டியுசியும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.
இவை அனைத்தும் அடைவதற்கான காரணம் முத்தரப்புக் கூட்டணி என்ற பிரதமர் வோங், மசெக அரசாங்கமும் என்டியுசியும் ஒன்றாகச் செயல்பட்டு வருவதாகச் சொன்னார்.
ஓராண்டுக்கு முன்னர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், கட்சிக்குத் தலைமைத் தாங்கும் பொறுப்பை தம்மிடம் ஒப்படைப்பதாக இதே மே தினப் பேரணியில் கூறியிருந்ததைப் பிரதமர் வோங் நினைவுகூர்ந்தார்.
மே 3ஆம் தேதி சிங்கப்பூரர்கள் நாட்டின் அடுத்த அத்தியாயத்தை முடிவுசெய்வார்கள் என்று கூறிய பிரதமர் வோங், தம்மையும் தமது குழுவையும் நியாயமாக மதிப்பிட்டு சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்ல மசெகமீது நம்பிக்கை வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.