இந்தோனீசியா, பாப்புவா நியு கினி, கிழக்கு திமோர், சிங்கப்பூர் என நான்கு நாடுகளுக்கு வருகையளித்த திருத்தந்தை போப் ஃபிரான்சிஸின் ஆசிய பசிபிக் வட்டாரப் பயணம் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவுற்றது.
எனினும், அவரது வருகையால் சமய நல்லிணக்கம், அன்பு, சகோதரத்துவம் எனப் பற்பல அத்தியாயங்கள் பலரது நினைவுகளில் நீங்கா வண்ணம் வலம் வரத் தொடங்கிவிட்டன.
போப்பாண்டவர் சிங்கப்பூர் வருகிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து அரசாங்கம் துவங்கி ஆலயங்கள் வரை பலதரப்பினரும் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே. ஆயினும் போப்பாண்டவர் தங்கள் நாட்டுக்கு வருகிறார் என்று கேள்விப்பட்ட சிங்கப்பூரர்கள் பலர் சமயம், இனம் மொழி கடந்து அவரது வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அளவிட முடியா ஆனந்தம்
போப்பாண்டவரைச் சந்தித்ததை விவரிக்க முடியாத மகிழ்ச்சி என்றார் திருவாட்டி கிறிஸ்டினா செல்வம், 60.
“போப்பாண்டவர் வருகை பற்றி கேள்விப்பட்டவுடன் எப்படியாவது அவரைச் சந்தித்தாக வேண்டும் என்று கிளம்பிவிடுவேன். இதுவரை அவரது பயணம் குறித்து கேள்விப்பட்டு 2015ஆம் ஆண்டு இலங்கை, 2017ல் வத்திகன் சென்றேன். இப்போது அவர் சிங்கப்பூருக்கு வருகிறார் என்றவுடன் ஏற்பட்ட வியப்பும் ஆனந்தமும் அளவிட முடியாதது,” என்று சொன்னார் திருவாட்டி கிறிஸ்டினா.
“போப் ஃபிரான்சிஸ் ஒரு தலைவர் என்பதைக் காட்டிலும் அவர் மக்களுக்கான போப் என்பதே உண்மை. சிறியோர், சிறையில் இருப்போர், வசதி குறைந்தோர் என்றிருப்போரை, ஏழைகளைத் தேடிச் சந்திக்கும் அவரது இயல்பே அவரைச் சந்திக்க நான் எடுக்கும் முயற்சிகளுக்கான முக்கியக் காரணம்,” என்றார் அவர்.
வழி நெடுக வாழ்த்து
தொடர்புடைய செய்திகள்
திட்டமிடப்பட்ட பயணத்தைத் தாண்டி, பொதுமக்களில் பலர் போப் ஃபிரான்சிசை நேரடியாகக் சந்திக்கும் வாய்ப்பை, தற்செயலாகப் பெற்று பூரிப்படைந்தனர்.
செந்தினா, ஜென்சிலியா போன்ற பொதுமக்களில் சிலர் எதிர்பாராத விதமாக போப்புடன் கைகுலுக்கி அவரின் ஆசியைப் பெற்றனர்.
“எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கத்தோலிக்க தாதிமை இல்லமான புனித தெரசா இல்லத்திற்கு போப் சென்றிருந்தபோது அங்கு அவரைத் தொலைவிலிருந்து பார்த்தேன். அதன் பிறகு விரைந்து கத்தோலிக்க தொடக்கக் கல்லூரி வந்தேன்.
“திருத்தந்தையிடமிருந்து நான் ஜெபமாலை பெற்றேன். எங்களை அவர் ஆசிர்வதித்தார். இதற்கு மேல் எங்களுக்கு எதுவும் வேண்டாம்,” என்று கூறினார் ஜென்சிலியா.
“போப் ஃபிரான்சிசைப் பார்த்தாலே போதும் என்றிருந்தேன். ஆனால் அவர் என்னை அழைத்து, ஆசிர்வதித்து ஜெபமாலை தருவார் என நினைக்கவில்லை,” என்று பினாங்கைச் சேர்ந்த செந்தினா சின்னப்பன், 30, கூறினார்.
கோல்கத்தா விமான நிலையத்திற்கு அருகே தம் மாணவர்களுடன் 1986ல் அப்போதைய போப் ஜான்பாலைச் சந்தித்த ஓய்வுபெற்ற ஆசிரியர் லிலியன் மார்கரெட் ஹார்ட், 64, இம்முறை மற்றொரு போப்பாண்டவரான ஃபிரான்சிசைக் காண முடிந்ததில் பேருவகை அடைந்ததாகக் கூறினார்.
“தேவாலயத்தைப் பராமரித்து அதனை உயர்த்துவதற்கு போப் ஃபிரான்சிஸ் தேவைப்படுகிறார்,” என்றார் திருவாட்டி ஹார்ட்.
வத்திகன் நகர் சென்றும் போப்பைக் காண இயலாத இல்லத்தரசி அந்தோணி ருஃபீனா, சிங்கப்பூரிலேயே அவரைச் சிறிது நேரம் காண இயன்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார்.
பிற சமயத்தவர் மனத்தை வென்றார்
பிறருடன் இணைந்து வாழ்தல், சகிப்புத்தன்மை, கலந்துரையாடல் ஆகியவற்றுக்கான குரலாக போப் ஃபிரான்சிஸ் திகழ்வதாக சமய நல்லிணக்கக் கலந்துரையாடலின் பார்வையாளர்களில் ஒருவராக இடம்பெற்ற ‘ஹேஷ்.பீஸ்’ சமய நல்லிணக்க அமைப்பின் நிறுவனர் நஸ்ஹத் ஃபஹீமா பாராட்டினார்.
“வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்துள்ள மக்கள், உறவுகளை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற கருத்தை போப் போன்றோரின் முயற்சிகள் எடுத்துரைக்கின்றன,” என்றும் திருவாட்டி நஸ்ஹத் கூறினார். இத்தகைய கலந்துரையாடலில் பெண்களையும் தேவாலயம் அதிகம் ஈடுபடுத்த முயல்வதையும் அவர் சுட்டினார்.
“2019ல் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு போப் சென்றிருந்தபோது அவரும் இஸ்லாமியப் போதகர் ஒருவரும் மானுட சகோதரத்துவத்திற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டனர். போப்பின் மனிதநேயப் பண்புகளை முஸ்லிம் என்ற முறையில் நான் ஆதரிக்கிறேன்,” என்றார் திருவாட்டி நஸ்ஹத்.
பிற சமயத்தலைவர்களுடன் இணைந்து போப்பிற்கு வணக்கம் கூறியோரில் ஒருவரான இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் திரு க. செங்குட்டுவன், மண்டியிட்ட வண்ணம் போப்பாண்டவருக்கு வணக்கம் செலுத்தினார்.
“அவரை மேலிருந்து கீழ்நோக்குவதற்குப் பதிலாக மண்டியிட்டு வணங்குவதே என்னைப் பொறுத்தவரை பண்புமிக்க செயல். அந்தத் தருணத்தில் எனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி மட்டற்றது. என்னைப் பொறுத்தவரையில், இவரது உரை, இந்து சமயக் கோட்பாடுகளை எதிரொலிக்கும் விதமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
“மக்கள் அனைவரையும் எளிதில் கவரக்கூடிய தலைவரான போப் ஃபிரான்சிஸ், எப்போதும் வலியுறுத்தும் அன்பு, அவரின் கண்களிலிருந்தே தென்படுகிறது,” என்றார் கலந்துரையாடலுக்கு வந்திருந்த ஹார்மனி சர்க்கல்’ எனும் நல்லிணக்க வட்டத்தைச் சேர்ந்த 30 வயது ஹேமரூபன்.
இதற்கிடையே, செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தாம் மேற்கொண்ட திருப்பயணம் சிறந்த முறையில் நிறைவுபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ரோம் திரும்பியவுடன் அங்குள்ள மேரி மேஜர் பேராலயம் சென்று அன்னை மரியாவிற்கு நன்றி செலுத்தினார் திருத்தந்தை ஃபிரான்சிஸ் என்று வத்திகன் செய்திக் குறிப்பு தெரிவித்தது.