முன்னதாகவே வழங்கப்படும் குழந்தை போனஸ் கூடுதல் தொகை

முன்னதாகவே வழங்கப்படும் குழந்தை போனஸ் கூடுதல் தொகை

2 mins read
d6d6861d-b07d-42c9-a59e-9a1291744897
சிங்கப்பூரில் குழந்தைப் பிறப்பு விகிதம் 2022ஆம் ஆண்டில் சாதனை அளவாக 7.9 விழுக்காடு சரிந்தது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கான குழந்தை போனஸ் கூடுதல் தொகை முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் மாதத்திலிருந்தே வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அந்தக் கூடுதல் ஊக்கத்தொகையானது அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

“பிள்ளை மேம்பாட்டுக் கணக்கு (சிடிஏ) தொடக்க மானியம் முன்னதாகவே கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் இவ்வாண்டு பிப்ரவரி 14 முதல் ஜூலை 31 வரை பிறந்த அல்லது பிறக்கவுள்ள கிட்டத்தட்ட 12,000 குழந்தைகளின் பெற்றோர்கள் பயனடைவர். ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்களும் இதன்மூலம் பயனடைவர்,” என்று அமைச்சர் இந்திராணி விளக்கினார்.

ஆயர் ராஜாவில் ‘கோ! மாமா’ எனும் புதிய உள்ளூர்த் தொழில் நிறுவனத்திற்குச் சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, சிடிஏ தொடக்க மானியம் 3,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தி வழங்கப்படும் என்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்திருந்தார்.

அத்தொகை பிள்ளைகளின் சிடிஏ கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடும். பெற்றோர்கள் அத்தொகையைத் தங்கள் குழந்தைகளின் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கும் பாலர் பள்ளிக் கட்டணத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அத்துடன், முதல் இரண்டு குழந்தைகளின் சிடிஏ கணக்கில் பெற்றோர்கள் சேமிக்கும் தொகைக்கு வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையில் அரசாங்கம் வழங்கும் தொகை வரம்பும் $1,000 உயர்த்தப்படவுள்ளது.

இப்போது, பிள்ளை மேம்பாட்டு இணைச் சேமிப்பு (குழந்தை போனஸ்) திட்டத்தின்கீழ் முதல் குழந்தைக்கு $3,000, இரண்டாம் குழந்தைக்கு $6,000 தொகையைப் பெற்றோர்கள் சிடிஏ கணக்கில் சேமித்தால் அரசாங்கமும் அதே தொகையை அக்கணக்குகளில் நிரப்பி வருகிறது. இனி அத்தொகை முறையே முதல் குழந்தைக்கு $4,000ஆகவும் இரண்டாம் குழந்தைக்கு $7,000ஆகவும் உயர்த்தப்படும்.

நிதியாதரவாகக் கிடைக்கும் எந்தவொரு தொகையும் உதவியாக இருக்கும் என்றார் 2023 ஏப்ரலில் ஓர் ஆண் குழந்தையை ஈன்ற திருவாட்டி தாரணி, 27.

கருவுற்று 30 வாரங்களிலேயே பிறந்துவிட்ட அவரது மகன், அதுமுதல் மருத்துவமனையிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறான்.

“கூடுதல் மானியங்கள் அவனது மருத்துவ, மருந்தகச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும்,” என்றார் மருத்துவத் தொழில்நுட்பராகப் பணியாற்றும் திருவாட்டி தாரணி.

நிதியுதவியையும் தாண்டி, தாய்மார்களின் நல்வாழ்விற்கும் ஆதரவு வழங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் குழந்தைப் பிறப்பு விகிதம் 2022ஆம் ஆண்டு சாதனை அளவு குறைந்தது. 2021ல் 38,672 குழந்தைகள் பிறந்த நிலையில் 2022ல் அந்த எண்ணிக்கை 35,605ஆகச் சரிந்தது.

மேம்படுத்தப்பட்ட குழந்தை போனஸ் திட்டம் தொடர்பில் கூடுதல் தகவல் அறிய விரும்பும் பெற்றோர்கள் 1800 111 2222 என்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நேரடி அழைப்பு எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.babybonus.msf.gov.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்