கல்வியில் சிறப்பாகச் செய்ய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிக்கு அப்பால் துணைப்பாட வகுப்புகள் அவசியம் என்பது சிங்கப்பூரில் கருத்தாய்வு ஒன்றில் பங்கேற்ற நால்வரில் மூன்று பெற்றோரின் கருத்தாகும்.
அக்கருத்தாய்வின் முடிவுகள் திங்கட்கிழமை (நவம்பர் 9) வெளியிடப்பட்டன. அதில் குடும்பங்கள் மாதந்தோறும் ஒவ்வொரு பிள்ளைக்கும் சராசரியாக 600 வெள்ளி துணைப்பாட வகுப்புகளுக்காகச் செலவிடுவது தெரியவந்தது.
கல்விரீதியான நெருக்குதலைக் குறைக்க விருப்பம்
கருத்தாய்வில் பங்கேற்ற 72 விழுக்காட்டுப் பெற்றோர் தங்கள் பிள்ளைகள்மேல் கல்வி ரீதியான நெருக்குதலைக் குறைக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அதேவேளை, பிள்ளைகள் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகளில் பின்தங்கிவிடக்கூடும் என்ற அச்சமும் அவர்களிடையே இருந்துவருகிறது.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வைக் கட்டாயமாக்காமல் பிள்ளைகளுக்கு உயர்நிலைப் பள்ளிகளில் இடம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் முறை நெருக்குதலைக் குறைக்கும் என்பது 77 விழுக்காட்டுப் பெற்றோரின் கருத்தாகும்.
கல்விக்குக் குரல் கொடுக்கும் அமைப்பான எவ்ரிசைல்ட்.எஸ்ஜி (EveryChild.SG) கருத்தாய்வின் முடிவுகளை வெளியிட்டது. அதில் பங்கேற்ற பெரும்பாலோர் சிங்கப்பூரின் கல்வி முறையில் தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தனர். அதேநேரம், கல்வியில் போட்டித்தன்மை, துணைப்பாட வகுப்புகளுக்கான செலவு ஆகியவற்றைப் பற்றி அவர்களுக்குக் கவலை இருந்துவருகிறது.
கருத்தாய்வில் பங்கேற்றவர்கள்
நில்சன்ஐகியூ சந்தை ஆய்வு நிறுவனம் கருத்தாய்வை கடந்த ஜனவரியிலிருந்து பிப்ரவரி மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தியது. அதில் மொத்தம் 4,007 சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் கலந்துகொண்டனர்.
அவர்களில் 2,002 பெற்றோர், கடந்த ஐந்தாண்டுகளில் உள்ளூர் தொடக்கப்பள்ளிகளுக்குச் சென்ற பிள்ளைகளைக் கொண்ட 25லிருந்து 65 வயதுக்கு உட்பட்டவர்கள். தற்போது தொடக்கப் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோரும் அவர்களில் அடங்குவர்.
கருத்தாய்வில் பங்கேற்ற எஞ்சிய 2,005 பெற்றோர், உள்ளூர் தொடக்கப் பள்ளிகளில் பயின்ற 18லிருந்து 30 வயதுக்கு உட்பட்ட இளவயது பெரியவர்களாகும்.
துணைப்பாட வகுப்புகளுக்கான செலவு
மாதத்துக்கு 5,000 வெள்ளிக்கு உட்பட்ட வருமானம் உள்ள குடும்பங்கள் தொடக்கப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் சராசரியாக 300 வெள்ளி செலவிடுவதும் கருத்தாய்வில் தெரியவந்தது.
அதேவேளை, 5,000லிருந்து 15,000 வெள்ளிக்கு உட்பட்ட வருமானத்தைக் கொண்ட குடும்பங்கள் சராசரியாக 600 வெள்ளி செலவிடுகின்றன. 15,000லிருந்து 20,000 வெள்ளிக்கு உட்பட்ட வருமானத்தைக் கொண்ட குடும்பங்களில் அத்தொகை 1,000 வெள்ளியாக இருக்கிறது.
