தேசிய தினப் பேரணி உரையில் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆதரவுத் திட்டங்கள் பெற்றோரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கூடுதல் நிதி ஆதரவோடு, பிள்ளைகளுடன் கூடுதல் நேரம் செலவிடவும் அவை வழியமைத்துக் கொடுத்துள்ளதாகப் பெற்றோர் கூறினர்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் இவ்வாண்டு தேசிய தினப் பேரணி உரை குறித்து எஸ்பிஎச் அரங்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தமிழ் முரசு நடத்திய கலந்துரையாடலில் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
தேசிய தினப் பேரணி உரையில் குடும்பங்களுக்கு ஏராளமான உதவித் திட்டங்களைப் பிரதமர் அறிவித்திருந்தார். கூடுதல் பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு, குழந்தைப் பராமரிப்புக் கட்டணக் குறைப்பு, பிள்ளைகளின் 17 வயதுவரை தொடர் நிதி ஆதரவு முதலியவை அவற்றுள் அடங்கும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கவிருக்கும் நிதி ஆதரவு மொத்தமாகக் கிட்டத்தட்ட $70,000. அதில் $62,000 பெறுமான புதிய குழந்தை ஆதரவுத் தொகுப்புத் திட்டமும் அடங்கும்.
முக்கியமாக, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்குக் கூடுதல் விடுப்பு நாள்கள் அறிவிக்கப்பட்டது மிகவும் உதவியாக இருக்கும் என்றார் எஸ்.ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுக் கழகத்தில் முனைவர் பட்டம் பயில்பவரும் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாருமான நஸ்ஹத் பஃஹீமா. பலரின் சூழ்நிலையையும் குடும்பத்தினரின் தேவைகளையும் புரிந்துகொண்டு பராமரிப்பு விடுப்பு நாள்களை அரசாங்கம் கூட்டியிருப்பது மனநிறைவு தருவதாக அவர் சொன்னார்.
தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் ‘இ2ஐ’ எனும் வேலைவாய்ப்பு, வேலைத்தகுதிக் கழகத்தில் பணிபுரிபவருமான வீணா சுப்பிரமணியம் அந்தக் கருத்தை ஆமோதித்தார். கூடுதல் விடுப்பு நாள்களால் நிறுவனங்களுக்காகும் செலவை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் கூறியிருப்பதையும் அவர் பாராட்டினார்.
இளையரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்குப் பிரதமரின் அறிவிப்பு ஊக்கமளிக்கும் என்றார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்யும் முஹம்மது ஜாஃபிர். புதிய உதவித் திட்டங்கள் இளையர்க்கு நிச்சயம் நம்பிக்கையைக் கொடுக்கும் என்று அவர் சொன்னார்.
இவற்றைப் பற்றியும் தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் குறிப்பிட்டுப் பேசிய மற்ற சில முக்கிய அம்சங்கள் பற்றியும் பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.


