வாகனப் பதிவுக் கட்டணச் சலுகைத் தள்ளுபடி குறைப்பு அமல்; மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிப்பு

வாகனப் பதிவுக் கட்டணச் சலுகைத் தள்ளுபடி குறைப்பு அமல்; மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிப்பு

2 mins read
cd9f9427-7fbd-45f5-bc43-a788074b2b70
அலெக்ஸாண்டிரா சாலையில் உள்ள பிஓய்டி விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கார் உரிமையாளருக்கான செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, கார் வாங்கும் எண்ணம் கொண்டிருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற தெரிவுகளைத் தேடிச் சென்றதால், சனிக்கிழமையன்று (பிப்ரவரி 28) கார் விற்பனை நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

வாகனப் பதிவுக் கட்டணச் சலுகைத் தள்ளுபடியில் செய்யப்பட்டுள்ள குறைப்பு, கார் வைத்திருப்பதற்கான ஒட்டுமொத்தச் செலவை அதிகரித்துள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் கார்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும். மின்சார வாகனங்களைவிட பெட்ரோல்-ஹைப்ரிட் மற்றும் உள் எரிவாயு எரிப்பு இயந்திரக் கார்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வாங்குபவர்களைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை வாகனங்களை நோக்கித் திருப்பியுள்ளது.

அலெக்ஸாண்டிரா சாலையில் உள்ள பிஓய்டி விற்பனை நிலையத்தில் காலை 11.30 மணியளவில் இருந்த ஏறத்தாழ இருபது பேரில், 52 வயது திரு. கோர் என்பவரும் ஒருவர்.

அவர் $199,888 விலையுள்ள புத்தம் புதிய ‘பிஓய்டி சீலயன்7 பிரிமியம்’ காருக்கான முன்பணத்தைச் செலுத்தினார். கல்வித்துறையில் பணியாற்றுபவரும் மூன்று குழந்தைகளின் தந்தையுமான அவர் கூறுகையில், “எனது தற்போதைய காரின் ஐந்தாண்டு காலம் முடிவடையப் போகிறது, அதனால்தான் நான் இங்கு வந்தேன். வாகனச் சந்தையை ஆய்வு செய்ததில், தற்போதைய சூழலில் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். அண்மைய அறிவிப்புதான் இந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது,” என்றார்.

அரசாங்கத்தின் அறிவிப்பிற்குப் பிறகு விற்பனை 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக எம்ஜி கார்களை விநியோகிக்கும் யூரோகார்ஸ் இவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரேமண்ட் இங் கூறினார்.

மின்சார வாகனங்களை முன்கூட்டியே வாங்குபவர்களுக்கான தள்ளுபடிகள் போன்ற கொள்கைகள், 2027ல் $20,000 ஆகக் குறைக்கப்படவுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற மாற்றங்கள் வாங்குபவர்களை மின்சார வாகனங்களை நோக்கி நகர்த்தும் என்றார்.

“புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது. கடந்த ஆண்டில், உள் எரிவாயு எரிப்பு இயந்திரக் கார்களைவிட அதிக மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மின்சார வாகனங்கள்தான் எதிர்காலம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்,” என்று திரு இங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்