வண்ண மலர் அலங்காரங்களுடன் களைகட்டவுள்ள பூங்கா விழா

வண்ண மலர் அலங்காரங்களுடன் களைகட்டவுள்ள பூங்கா விழா

2 mins read
ஜூலை 4 முதல் 12ஆம் தேதிவரை நடைபெறும்
c80c1b34-45b8-42d8-b8e6-ef1f24002b6e
வண்ண மலர்த் தொகுப்புகள், காட்சிகளுடன் பொதுமக்களை உற்சாகப்படுத்தத் தயாராகிவருகிறது கரையோரப் பூந்தோட்டங்கள் வளாகத்திலுள்ள ‘த மெடோஸ்’. - படம்: சுந்தர நடராஜ்

சிங்கப்பூரில் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிரம்மாண்டமான பூங்கா விழா இவ்வாண்டு ஜூலை 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.

கரையோரப் பூந்தோட்டங்களில், மலர்களின் விழா எனும் கருப்பொருளில் நடைபெறும் இவ்விழா ஜூலை 12ஆம் தேதி வரை நடைபெறும்.

கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அனைத்துலக மலர்க் கண்காட்சி பத்தாவது முறையாக இவ்வாண்டு நடைபெறவிருக்கிறது. பல்வேறு வடிவமைப்பாளர்களின் தோட்டக்கலை, மலர் அலங்காரக் கலைகளை இது பறைசாற்றும்.

இவ்விழாவுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், ஜூலை 26ஆம் தேதி அப்பணிகளைச் செய்தியாளர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

விழாவின் முக்கிய ஈர்ப்பாக அமையும் மலர் அலங்கார ‘ரோலர் கோஸ்டர்’ சறுக்கு வண்டி.
விழாவின் முக்கிய ஈர்ப்பாக அமையும் மலர் அலங்கார ‘ரோலர் கோஸ்டர்’ சறுக்கு வண்டி. - படம்: சுந்தர நடராஜ்

முக்கிய மலர்க்காட்சிகள், அலங்காரப் பணிகள் குறித்த விவரங்களும், சில முக்கிய அங்கங்களின் சிறப்பம்சங்களையும் தமிழ் முரசிடம் விளக்கினார் தேசியப் பூங்காக் கழகத்தின் வடிவமைப்பு இயக்குநர் ஜேசன் ரைட்.

இவ்விழாவில் பல்வேறு சிறப்புப் போட்டிகளும் அணிவகுக்கவுள்ளன.

குறிப்பாக, முந்தைய விழாக்களில் ‘சிறந்த காட்சிக்கான’ (Best of Show) விருதுகளை வென்ற எட்டுப் பேர் தங்களின் புத்தாக்க வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தி, உச்ச விருதுக்காகப் (Pinnacle Award) போட்டியிடுவர்.

மேலும், பார்வையாளர்களின் கண்முன்னே போட்டியாளர்கள் மலர் வடிவமைப்புகளைச் செய்து காட்டும் ‘மலர் அலங்காரங்களுக்கான உலக வெற்றியாளர்’ (Floral Window to World Championship) போட்டியும் நடைபெறும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மூன்று நாள்களில் ஏழு சுற்றுகளாக நடைபெறவுள்ள இப்போட்டியில் 17 அனைத்துலக மலர் அலங்காரக் கலை வல்லுநர்கள் போட்டியிட உள்ளனர்.

ஜூலை 4ஆம் தேதி தொடங்கவுள்ள விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
ஜூலை 4ஆம் தேதி தொடங்கவுள்ள விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன. - படம்: சுந்தர நடராஜ்

இத்துடன், ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்கிட் மலர்களுடன் கூடிய ஆர்கிட் எக்ஸ்ட்ராவெகன்சா, சிங்கப்பூர்த் தோட்டக்கலைப் போட்டி, பழ, காய்கறிகள் வளர்ப்புப் போட்டி (Community Garden Edibles), உயர்கல்விக் கழக மாணவர்களுக்கான வடிவமைப்புப் போட்டிகள் உள்ளிட்ட பலவும் இடம்பெறவுள்ளன.

தோட்டக்கலை ஆர்வலர்களுக்கான சந்தையும் அமைக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் கண்டு மகிழவும், புகைப்படங்கள் எடுக்கக்கூடிய வகையிலும் கண்காட்சிகளும் தயாராகி வருகின்றன.

இதற்கான நுழைவுச்சீட்டுகளைக் கரையோரைப் பூந்தோட்டங்களிலும் தேசியப் பூங்காக் கழகத்தின் இணையத்தளம் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்