தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரம்கூட இல்லாத வேளையில், லிட்டில் இந்தியாவில் விழாக்கால உணர்வு களைகட்டியுள்ளது. குடும்பத்தோடு சேர்ந்து பண்டிகையைக் கொண்டாட தீவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் லிட்டில் இந்தியாவுக்குப் படையெடுக்கின்றனர்.
பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்கவும் உணவருந்தவும் அதிகமானோர் லிட்டில் இந்தியாவுக்குச் செல்வதால் அங்குள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
வாகனங்களை நிறுத்துவதற்காக வாகனவோட்டிகள் பலரும் அலைமோதுவதால், ரேஸ் கோர்ஸ் சாலை, பஃப்ளோ சாலை, அப்பர் டிக்சன் சாலை, டன்லப் ஸ்திரீட் போன்ற சாலைகளில் வாகனங்களின் நீண்ட வரிசை காணப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, தேக்கா நிலைய கீழ்த்தள வாகன நிறுத்துமிடத்துக்குச் செல்வதற்காக பஃப்ளோ சாலையில் சேரும் அந்த வரிசை, சிராங்கூன் சாலை, புக்கிட் தீமா சாலை வரை நீளுகிறது. இதனால், தேக்கா நிலைய பேருந்து நிறுத்தத்தில் உரிய நேரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்குவதில் பேருந்து ஓட்டுநர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் சிலிகி சாலை வரை நீளுகிறது.
இதுபோக, முறையான வாகன நிறுத்துமிடம் கிடைக்காததால், வாகனவோட்டிகள் பலரும் டன்லப் ஸ்திரீட், டிக்சன் சாலை, மெட்ராஸ் ஸ்திரீட், பேராக் சாலை போன்ற வீதிகளில் தங்கள் வாகனங்களைச் சாலையோரம் இரட்டை மஞ்சள் கோடு வழியாக நிறுத்திவைக்கின்றனர். இதனால், அவ்வழியாகச் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்திவைக்கும் வாகனவோட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.
இந்நிலையில், வாகனவோட்டிகளின் வசதிக்காக தேக்கா பிளேஸ் கடைத்தொகுதி, அக்டோபர் 24 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை வாகன நிறுத்தக் கட்டணத்தில் சலுகை வழங்குகிறது. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) மற்றும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆல்வின் டானின் கோரிக்கையை ஏற்று, வாகன நிறுத்தக் கட்டணத்தை தேக்கா பிளேஸ் தற்காலிகமாகக் குறைத்துள்ளது.
அக்கடைத்தொகுதியின் பலமாடி வாகன நிறுத்துமிடத்தில் ஏறத்தாழ 400 இடங்கள் உள்ளன.
லிட்டில் இந்தியா செல்லும் வாகனவோட்டிகள், அனைவரின் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு தங்கள் வாகனங்களை உரிய நிறுத்துமிடங்களில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.