புகைமூட்டச் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றம் விவாதிக்கும்

புகைமூட்டச் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றம் விவாதிக்கும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Nov 2026 - 7:03 pm

2 mins read

சிங்கப்பூர் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) ஒன்றுகூடும்போது எல்லை தாண்டிய புகைமூட்டத்துக்கு நிறுவனங்களைப் பொறுப்பேற்க வைப்பதிலும் இந்தோனீசியாவின் காட்டுத்தீ பிரச்சினைமீதும் கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறது.

எல்லை தாண்டிய புகைமூட்டத்தைச் சிங்கப்பூர் எவ்வாறு கையாள்கிறது என்பது பற்றி 30க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

அக்கேள்விகள் 2014ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டம் தொடர்புடையவை.

இந்தோனீசியாவில் மூட்டப்படும் காட்டுத்தீக்கு நிறுவனங்களைப் பொறுப்பேற்க வைக்கவேண்டும். அதற்குப் புகைமூட்டச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது.

சிங்கப்பூரில் எந்தவொரு பகுதியிலாவது காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 24 மணிநேரத்துக்குமேல் மோசமான நிலையில் நீடித்தால் புகைமூட்டச் சட்டத்தை முடுக்கிவிட முடியும்.

புகைமூட்டச் சட்டம் இதற்குமுன் இருமுறை முடுக்கிவிடப்பட்டிருந்தும் அபராதங்களோ குற்றச்சாட்டுகளோ சுமத்தப்படவில்லை.

2015ஆம் ஆண்டும் இவ்வாண்டும் அந்தச் சட்டத்தின்கீழ் தடுப்புக் கட்டுப்பாட்டு அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டன.

2015ல் பதியப்பட்ட ஆறு வழக்குகளில் இரண்டு மட்டும் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய நான்கு வழக்குகள் முடிவுறவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த வழக்குகளின் விவரங்கள் குறித்தும் வழக்குகளை முடித்துவைப்பதில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

அமலாக்க இடைவெளிகளைப் பூர்த்திசெய்ய அரசாங்கம் சட்ட ரீதியான திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கிறது என்றும் கேட்கப்படுகிறது.

புகைமூட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை இன்னும் சிறந்த முறையில் எவ்வாறு அடையாளம் கண்டு அவற்றின்மீது நடவடிக்கை எடுப்பது என்ற கேள்வியையும் உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.

முன்னதாக மூத்த அமைச்சர் கா. சண்முகம் கடந்த மாதம் 28ஆம் தேதி, எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத் திருத்தங்களை நவம்பர் அமர்வில் அரசாங்கம் முன்வைக்கும் என்று கூறியிருந்தார்.

அதன் மூலம், தேவைப்படும் அனைத்து தகவல்களையும் ஆவணங்களையும் பெற நியமிக்கப்பட்ட விசாரணையாளர்களுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முழு அனுமதி வழங்குவது கட்டாயமாக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்