தனிமையில் மூத்தோர் இறப்பதைத் தவிர்க்க தொண்டூழியர்களுடன் கைகோப்பு

2 mins read
197b45ff-c80a-4cab-8178-c1e0d7b33bab
லவ்விங் ஹார்ட் பல்நோக்கு சேவை மையத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள லவ்விங் ஹார்ட் மூத்தோர் நடவடிக்கை நிலையத்தின் முன்பு 2025 டிசம்பர் 30ஆம் தேதி எடுத்துக்கொண்ட படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள ஒரு சமூக சேவை அமைப்பு, அண்டை வீட்டில் தனியாக வாழும் மூத்தோரைக் கண்காணிக்கவும் கண்டறியப்படாத மரணங்களைத் தவிர்க்கவும் தொண்டூழியர்களின் உதவியை நாடியுள்ளது.

அந்த நோக்கங்களுக்காக, பயிற்சிபெற்ற தொண்டூழியர்களுக்குச் செலவிடவும் முன்வந்துள்ளது ‘லவ்விங் ஹார்ட் (Loving Heart) பல்நோக்கு சேவை மையம்’ என்னும் அந்த அமைப்பு.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய மூத்தோருடன் நட்பாகப் பழகி, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பரிந்துரைக்கவும் அவர்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்த தன்னுடன் இணைந்து பணியாற்றவும் தொண்டூழியர்களுக்கு மணிக்கு $10 அளிக்கத் திட்டமிட்டுள்ளது லவ்விங் ஹார்ட்.

தற்போது ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தின் மூன்று இடங்களில் மூத்தோர் நடவடிக்கை நிலையங்களை அது நடத்தி வருகிறது.

2026ன் முதல் காலாண்டில் ‘கண்டறியப்படாத மரணங்கள் இனி இல்லை’ என்னும் திட்டத்தைச் செயல்படுத்த அந்த அமைப்பு முயன்று வருகிறது.

யூஹுவா வட்டாரத்தின் இரண்டு புளோக்குகளில் தனிமையில் வசிக்கும் மூத்தோரிடம் இருந்து திட்டத்தைத் தொடங்க அது முடிவுசெய்துள்ளது.

காலப்போக்கில் அந்தக் குடியிருப்புப் பேட்டையில், தனியாக வசிக்கும் 400 மூத்தோரைச் சென்றடைய அது நம்பிக்கை கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரில் அதிகமான மூத்தோர் தனியாக வசிக்கக்கூடிய காலக்கட்டத்தில் அந்த அமைப்பின் முயற்சி வெளிவந்துள்ளது.

2024ஆம் ஆண்டின் நிலவரப்படி, 65 வயதும் அதற்கு அதிகமான வயதும் உடைய 87,000 பேர் தனியாக வசிப்பதாக கடந்த அக்டோபர் மாதம் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அது 2018ஆம் ஆண்டின் எண்ணிக்கையைக் காட்டிலும் 50 விழுக்காடு அதிகம். அந்த ஆண்டில் தனியாக வசித்த மூத்தோர் எண்ணிக்கை 58,000.

வீட்டில் மூத்தோர் தனியாக இறக்கும் சம்பவங்களைத் தடுக்க சமூகத்தில் நட்புறவுத் திட்டங்கள் அவசியம் என்று திரு ஓங் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 33 மூத்தோரின் மரணம் கண்டறியப்படாததாக இருந்தது என ‘லவ்விங் ஹார்ட்’ திரட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகச் செய்திகளில் இருந்தும் ‘டெத் கோப்பித்தியாம் சிங்கப்பூர்’ என்பது போன்ற இணையத்தளங்களில் இருந்தும் அந்த எண்ணிக்கையைக் குறிப்பெடுத்ததாக அது கூறியது.

2024ஆம் ஆண்டு அத்தகைய மரண எண்ணிக்கை குறைந்தபட்சம் 42 என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

ஆயினும், தனிமையில் இறக்கும் மூத்தோர் எண்ணிக்கை பற்றியும் சிறிது காலம் வரை உடல் கண்டறியப்படாதவர்களின் எண்ணிக்கை குறித்தும் காவல்துறையிடம் கண்காணிப்புத் தகவல் இல்லை.

இந்நிலையில், அண்மைய ஆண்டுகளில் தனது வட்டாரத்தில் தனிமையில் மரணம் நிகழ்ந்த ஒரே ஒரு சம்பவத்தை மட்டுமே அறிந்ததாக லவ்விங் ஹார்ட் கூறியுள்ளது.

2024ஆம் ஆண்டில் ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வீடு ஒன்றில் 80 வயது மூதாட்டி தனிமையில் இறந்து கிடந்தது பற்றி அப்போது ஷின் மின் தெரிவித்திருந்ததை அது குறிப்பிட்டது.

கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் தனியாக இருந்தபோது அந்த மூதாட்டி இறந்ததாக அக்கம்பக்கத்தார் அந்த நாளேட்டிடம் அப்போது கூறினர்.

குறிப்புச் சொற்கள்