சொன்னதைவிடக் கூடுதல் வீடுகளைக் கழகம் உருவாக்கக்கூடும்: சீ ஹொங் டாட்

சொன்னதைவிடக் கூடுதல் வீடுகளைக் கழகம் உருவாக்கக்கூடும்: சீ ஹொங் டாட்

2 mins read
03b1a796-b27b-4433-8a9e-603785589752
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தொடக்கத்தில் சொன்னதைவிடக் கூடுதலான வீடுகளை விற்பனைக்குவிட இருப்பதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

தேவைக்கேற்பக் கட்டிவிற்கப்படும் (பிடிஓ) 55,000 வீடுகளை 2025ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யவிருப்பதாகக் கழகம் இதற்குமுன் கூறியிருந்தது.

ஆனால், வீடுகளுக்கான தேவை சிங்கப்பூரில் கணிசமாக அதிகரித்துள்ளதை அடுத்து கூடுதலான வீடுகளைக் கழகம் விற்பனைக்கு விடக்கூடும் என்று திரு சீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 8) ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் பேசிய திரு சீ, வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான சவால்கள் இன்னும் சிக்கலாகியிருப்பதாகக் கூறினார்.

மாறிவரும் பொருளியல் நிலவரத்துக்கு ஏற்ப வீடுகளைக் கட்டுப்படியானதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் வைத்திருப்பது அந்தச் சவால்களில் ஒன்று எனத் திரு சீ தெரிவித்தார்.

அத்தகைய சவால்களைச் சமாளிக்க அதிகாரிகள் கூடுதலான வீடுகளை இன்னும் துரிதமாகக் கட்டி முடிப்பார்கள் என்றார் திரு சீ.

கழகம் கிட்டத்தட்ட 19,600 பிடிஓ வீடுகளை இவ்வாண்டு அறிமுகம் செய்யவிருப்பதாகப் பகிர்ந்துகொண்ட திரு சீ, அவற்றுள் ஏறக்குறைய 4,000 வீடுகளை மூவாண்டுக்குள் பெற முடியும் என்றார்.

ஒற்றையரின், மூத்தோரின் அதிகரிக்கும் தேவைகளைப் பூர்த்திசெய்ய இவ்வாண்டிலிருந்து 2028ஆம் ஆண்டுவரை ஈரறை வீடுகளின் விநியோகத்தையும் கிட்டத்தட்ட 50 விழுக்காடுவரை உயர்த்தக் கழகம் திட்டமிட்டுள்ளது.

தனியார் வீடுகளும் துரிதமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற திரு சீ, கூட்டுரிமை வீடுகள் உட்ட ஏறக்குறைய 12,000 வீடுகளைச் சொத்துச் சந்தை நிறுவனங்கள் விற்பனைக்குவிட இருப்பதாகக் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வீடுகளுடன் ஒப்புநோக்க, அது 50 விழுக்காட்டுக்கும் அதிகம்.

தனியார் வீடுகளுக்கான தேவை அதிகரித்தால் கூடுதல் நிலத்தை அதற்கு ஒதுக்கவும் தயாராக இருப்பதாகத் திரு சீ சொன்னார்.

திரு சீ, பழையப் பேட்டைகளைப் புதுப்பிப்பது குறித்தும் பேசினார். சிங்கப்பூரில் பல வீவக வீடுகள் 60 ஆண்டுகளை எட்டிவிட்டன அல்லது எட்டவிருக்கின்றன என்ற அவர், வீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் சுற்று மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்