பிளவுபடும் உலகில், அரசியல் களத்தில் கடும் பின்னடைவைச் சந்தித்து வரும் நாடுகளின் நிலைமையைச் சுட்டிக்காட்டிய பிரதமர்

சரியான, முன்மாதிரியான அரசியல் திசையை மசெக அமைக்க வேண்டும்: லாரன்ஸ் வோங்

2 mins read
50219ce4-faa3-4da5-a8cc-89ae00998094
ஆளும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரும், பிரதமருமான லாரன்ஸ் வோங். - படம்: மசெக
multi-img1 of 2

வரையறைகளை மீறும் வகையில் அரசியல் களம் மாறிவிடும் போக்கைக் கண்டால் அதற்கு இசைந்துகொடுக்காமல், மக்கள் செயல் கட்சி குரல் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளரும் நாட்டின் பிரதமருமான லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.

இல்லாவிடில் உலக நாடுகள் பலவும் சந்தித்து வரும் இருள் சூழ்ந்த அரசியல் நிலவரத்தைப்போல் சிங்கப்பூர் அரசியலும் மோசமாகக்கூடும் என்றார் அவர்.

மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மசெகவை மீண்டும் பேரளவிலான மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் அமரவைத்த திரு வோங், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற அக்கட்சியின் மாநாடு மற்றும் விருது விழா-2025ல் உரையாற்றினார்.

சரியான அரசியல் நிலவரத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதை வகுப்பதில் கட்சிகளுக்கான பங்களிப்பு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

‘‘அரசியலில் சாதிக்க உண்மைகளைத் திரித்துக் கூறுவது, இனம் அல்லது சமயத்தைப் பயன்படுத்தி ஆதரவை உருவாக்குவது, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாற்றாகக் கைதட்டல்களை அள்ளுவதற்காக மக்களைத் தூண்டக்கூடிய நிலைப்பாடுகளை எடுப்பது உள்ளிட்ட எந்தவொரு தீங்கான செயலும் சிறிதாகத் தோன்றினாலும் அது பிரிவினைக்கு வழிவகுக்கும் ஆபத்தான அணுகுமுறை,’’ என்று பிரதமர் எச்சரித்தார்.

‘‘இத்தகைய செயல்கள் ஒவ்வொரு முறை நடக்கும்போதும் அவற்றுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்காவிட்டால், அவை அதிர்வலைகளை ஏற்படுத்தாது. மாறாக இத்தகைய செயல் வழக்கமானதுதான் என்ற எண்ணம் தோன்றிவிடும்,’’ என்றார் திரு வோங்.

ஒரு சிலர் மசெக எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதாகச் சொன்னாலும், மேற்கூறியவற்றிற்காகக் குரல் கொடுப்பதற்கு அரசியல் விலை கொடுக்க நேர்ந்தாலும், சிங்கப்பூரின் அரசியலைத் தூய்மையாகவும் நேர்மையாகவும், ஆக்ககரமாகவும் வைத்திருக்க, கட்சி தொடர்ந்து செயல்படும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

ஆழ்ந்த கடமை, பொறுப்புணர்வால் இதனை எடுத்துரைப்பதாகக் கட்சியினரிடம் அவர் விளக்கினார்.

கட்சியினர் ஏறத்தாழ 1,800 பேர் மத்தியில் உரையாற்றிய திரு வோங், கட்சியாக உறுதியாக நிற்பது அவசியம் என்றார். அமைதியாக இருந்துவிட்டால் நம் பண்புகள், தரம் மற்றும் சிங்கப்பூரின் எதிர்காலம் சார்ந்தவற்றில் மிகுந்த விலைகொடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

2025 பொதுத் தேர்தல் அவ்வளவு எளிதான போட்டியாக இருக்காது என்று தெரிந்துதான் மசெக அத்தேர்தலைச் சந்தித்ததாகத் தமது உரையில் திரு வோங் நினைவுகூர்ந்தார்.

தீவெங்கும் மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் அணிகளும் மாற்றத்தை ஏற்படுத்தினர்.

அது 9 நாள் தேர்தல் பிரசாரத்தின் வாயிலாக மட்டும் சாத்தியமாகவில்லை. ஐந்து ஆண்டுகளில் கடுமையான, நிதானமான உழைப்பு மூலம் மக்களின் பிரச்சினைகளைக் களைந்து, குறிப்பாக அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்ததன் மூலம் கிட்டியது என்று அவர் விளக்கினார்.

அண்மைய தேர்தலில் மசெக சிறப்பாகச் செயல்பட்டது என்றாலும் அடுத்த தேர்தல் புதிய போர்க் களமாக இருக்கும். அது இன்னும் கடுமையானதாக இருக்கக்கூடும் என்றார் அவர்.

ஒவ்வொரு வாக்குக்காகவும் தீவிரமாக உழைத்த கட்சியினருக்குப் பாரட்டு தெரிவித்த திரு வோங், ‘‘சத்தமின்றிச் சாதனை புரியும் நீங்களே மசெகவின் நாடித்துடிப்பு,’’ என்று அவர்களுக்குப் புகழ் மாலை சூட்டினார்.

குறிப்புச் சொற்கள்