பயணிகள் வருகை 5.8 மில்லியன்; உச்சத்தை எட்டிய சாங்கி விமான நிலையம்

2 mins read
230014d9-9aba-40f1-bd12-5b8f24206ab0
இவ்வாண்டு நவம்பர் 14ஆம் தேதி சாங்கி விமான நிலைய முனையம் 4ல் பயணிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அக்டோபர் மாதம் சாங்கி விமான நிலையம் 5.8 மில்லியன் பயணிகளை வரவேற்றுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் வந்துசென்ற பயணிகளைவிட 3.4 விழுக்காடு அதிகமாகும்.

சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG), இவ்வாண்டின் முதல் 10 மாதங்களுக்கான புள்ளிவிவரங்களை வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) வெளியிட்டது.

அதன்படி, சாங்கி விமான நிலையத்துக்கு 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை 57.9 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் 56.2 மில்லியன் பயணிகளும் 2024ஆம் ஆண்டில் 55.5 மில்லியன் பயணிகளும் அங்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புது இடங்களுக்கு புதிய விமானச் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டது இந்த வளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்று என அறியப்படுகிறது. சாங்கி விமான நிலையம் 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு 200 நகரங்களுக்கு இங்கிருந்து விமானச் சேவைகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளதும் கவனத்துக்குரியது.

விமானம் மூலம் சாங்கி விமான நிலையத்தில் அக்டோபர் மாதம் வந்திறங்கிய சரக்குகளின் எடை 182,000 டன்களைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டில் அங்கு கையாளப்பட்ட சரக்குகளின் எடை 178,000 டன்களாகும்.

ஜனவரி மாதத்தில் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், சாங்கி விமான நிலையத்தின் சேவைகள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை, பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தையும் கடந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் தரையிறங்கிய விமானங்களின் 10 மாத எண்ணிக்கை அக்டோபரில் 310,000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 302,000 விமானங்கள் அங்கு வந்துசென்றுள்ளன.

சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம், 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டிமுடிக்கப்படும் நிலையில், சுமார் 100 விமானச் சேவைகள் 7,000க்கும் மேற்பட்ட பயணங்களை இதர முனையங்களிலிருந்து மேற்கொள்கின்றன. அவை வாரந்தோறும் 160 உலகளாவிய நகரங்களுக்குச் சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளை இணைக்கின்றன.

குறிப்புச் சொற்கள்