ரயில் தடைகளில் பயணிகளை மையமாகக் கொண்ட தொடர்பு தேவை: நிபுணர்

2 mins read
708f866e-868b-49d9-890b-aad03aa7534e
ரயில் நம்பகத் தன்மை பணிக்குழுவின் தனியார் நிபுணர் டாக்டர் டோனி லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரயில் தடைகள் ஏற்படும்போது குறிப்பிட்ட தகவல்களுடன் பயணிகளுக்கு ஏற்ப உதவி வழங்குதல், அவர்கள் மாற்றுப் பயணம் குறித்த உகந்த முடிவுகள் எடுக்க உதவும் என்று ரயில் நம்பகத் தன்மை பணிக்குழுவின் நிபுணர் டாக்டர் டோனி லீ கூறியுள்ளார்.

பயணிகளை மையமாகக் கொண்ட தொடர்புமுறை, ரயில் தடைகளின்போது அவர்களுக்கு மிகவும் உதவியாகயிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிலப் போக்குவரத்து ஆணையம் அமைத்துள்ள ஐவர் அடங்கிய ரயில் நம்பகத் தன்மை தனியார் பணிக்குழுவில் ஒருவரான திரு டோனி லீ, வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) நடந்த 25 நிமிட ஊடக நேர்காணலில் பேசினார்.

ரயில் சேவைத் தடையில் பாதிப்படைந்த பயணிகள் எந்த நிலையில் உள்ளனர் என்பதைப் பொருத்து உதவிகள் வழங்கப்படவேண்டும் என்றார் அவர். உதாரணமாக ரயில் வண்டியில் சிக்கியோர், பாதிக்கப்பட்ட நிலையங்களில் நிற்போர், ரயில் வழித்தடங்களுக்கு வெளியில் உள்ளோர், சேவைகளை பயன்படுத்தத் திட்டமிடுவோர் என பயணிகள் பலவகைப்படுவர்.

எனவே ஒவ்வொரு நிலையில் உள்ளோருக்கும் வெவ்வேறு உதவிகள் தேவைப்படும் என்றார் 40 ஆண்டுகள் நவீன பெருவிரைவு ரயில் சேவையில் அனுபவம் வாய்ந்த டாக்டர் டோனி. அவர் ஹாங்காங் எம்டிஆர் ரயில் நிறுவனத்தின் முன்னாள் புதுமைத் திட்ட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

ரயில் நம்பகத் தன்மை தனியார் பணிக்குழு அதன் பரிந்துரைகளில், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டையும் தரவு பகுப்பாய்வுகளையும் ஏற்றுக்கொள்ளுதல், ரயில் பராமரிப்புக்கு அதிக சேவைத் தடை நேரத்தை ஒதுக்குதல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

மேலும் ரயில் பொறியியல் துறையில் திறன்வாய்ந்த மனிதவள முதலீட்டையும் பணிக்குழு ஊக்குவித்துள்ளது. அதன்வழி விநியோகஸ்தர்களை அதிகம் சாராமல், ஒருங்கிணைந்த பங்காளித்துவத்தை வளர்க்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில் சேவைகளை மேம்படுத்த அமைந்த ஐந்து நிபுணர்கள் பணிக்குழு, நவம்பர் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் ஐந்து நாள் நிலப் போக்குவரத்து ஆணையத்தை சந்திக்க சிங்கப்பூர் வந்துள்ளது. எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனங்களின் செயல்முறைகளையும் பராமரிப்பு நடைமுறைகளையும் அது ஆய்வு செய்கின்றது.

கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 15 முறை எம்ஆர்டி அல்லது எல்ஆர்டி சேவைகள் தடைப்பட்டன. அதன்பிறகு பிரான்ஸ், சீனா, தைவான், ஜப்பான், ஹாங்காங் ஆகியவற்றைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் நிபுணர்கள் அடங்கிய இந்த ரயில் நம்பகத்தன்மை பணிக்குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.

அதன் முழு பரிந்துரைகளைப் பணிக்குழு இவ்வாண்டு இறுதிக்குள் போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பிக்கும்.

குறிப்புச் சொற்கள்