பயணப்பெட்டிகளைத் தூக்கியெறிந்த உல்லாசக் கப்பல் நிலைய ஊழியர் பணிநீக்கம்

1 mins read
f06ae258-560f-449f-8bd6-99a9ca356275
பெட்டிகளுடன் தள்ளுவண்டி வந்ததும் ஊழியர் வண்டியைச் சாய்த்து பெட்டிகள் தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்டோம்ப்

ஹார்பர்ஃபிரண்ட்டில் உள்ள சிங்கப்பூர் உல்லாசக் கப்பல் நிலையத்தில் பயணப் பெட்டிகளைக் கையாளும் ஊழியர்கள், டிசம்பர் 30ஆம் தேதி பகலில் பெட்டிகளைத் தூக்கியெறிந்ததாக ஸ்டோம்ப் வாசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது ‘ஏற்றுக்கொள்ள முடியாத’ ஒரு செயல் என்று அவர் வெகுவாகச் சாடினார்.

“எங்களின் பயணப் பெட்டிகளை எடுப்பதற்காக நாங்கள் காத்திருந்தபோது அந்த ஊழியர்கள் இவ்வாறு நடந்துகொள்வதைக் கண்டோம்,” என்றார் அவர்.

பைகளைத் தாங்கிய முதல் தள்ளுவண்டியைக் கொண்டு வந்ததும் இரு ஊழியர்கள் அந்தத் தள்ளுவண்டியைச் சாய்த்ததாகவும் இதனால் பெட்டிகள் அனைத்தும் தரையில் விழுந்ததாகவும் அவர் சொன்னார்.

அனைவருக்கும் முன்னால், அந்த ஊழியர்கள் விழுந்த பெட்டிகளை நகரும் பட்டை மீது தூக்கி எறிந்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்து குழிப்பந்துத் தடிகளும் தோள்பைகளும் இன்னொரு தள்ளுவண்டியில் வந்தபோது, எவ்வித அக்கறையுமின்றி ஊழியர்கள் அதே மாதிரி தூக்கியெறிந்தனர்.

இது தொடர்பாக சிங்கப்பூர் உல்லாசக் கப்பல் நிலையத்துடன் ஸ்டோம்ப் செய்தித்தளம் தொடர்புகொண்டபோது, பயணப் பெட்டிகளைச் சரியாகக் கையாளாத ஊழியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிலையம் தெரிவித்தது.

இதற்கிடையே, ஊழியர்கள் பயணப் பெட்டிகளைத் தூக்கியெறிந்த விதத்தைப் பார்க்கும்போது, அது வழக்கமான ஒன்றாக அவர்கள் செய்து வந்துள்ளதைத் தாம் காண முடிந்ததாக ஸ்டோம்ப் வாசகர் சுட்டினார்.

அடுத்த முறை அவ்வழியாகப் பயணம் மேற்கொள்ளும்போது இதே செயலைப் பார்க்கக்கூடுமோ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்