தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உச்சநேரமில்லா வேளையின்போது ரயில் சேவை இலவசமாக வழங்கப்படுவதை வரவேற்கும் பயணிகள்

2 mins read
c69e65a7-d8f1-4139-93eb-41ff9368455c
டிசம்பர் 27ஆம் தேதியிலிருந்து செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி பாதையில் உள்ள ஏதேனும் ஒரு நிலையத்தில் அல்லது வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் உள்ள ஆறு நிலையங்களில், வாரநாள்களில் காலை 7.30 மணிக்கு முன்பு அல்லது காலை 9 மணிக்கும் 9.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பயணம் செய்பவர்கள், தங்கள் முதல் பயணத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உச்சநேரமில்லா வேளையின்போது இலவசமாக வழங்கப்படும் ரயில் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டிசம்பர் 27ஆம் தேதியிலிருந்து செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி பாதையில் உள்ள ஏதேனும் ஒரு நிலையத்தில் அல்லது வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் உள்ள ஆறு நிலையங்களில், வாரநாள்களில் காலை 7.30 மணிக்கு முன்பு அல்லது காலை 9 மணிக்கும் 9.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பயணம் செய்பவர்கள், தங்கள் முதல் பயணத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

பொங்கோல் கோஸ்ட், பொங்கோல், செங்காங், புவாங்கோக், ஹவ்காங், கோவன் ஆகியவை வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் உள்ள அந்த ஆறு நிலையங்களாகும்.

இத்திட்டம் அக்டோபர் 18ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

குறிப்பாக, வடக்கு-கிழக்கு ரயில் பாதைக்கு இது பொருந்தும்.

இத்திட்டத்தை வரவேற்பதாக ஸ்‌ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பயணிகள் சிலர் கூறினர்.

இருப்பினும், உச்சநேரமில்லா வேளையின்போதும் வடக்கு-கிழக்கு ரயில் பாதையிலும் செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி பாதையிலும் பயணிகள் கூட்டம் ஏற்கெனவே அதிகமாக இருப்பதை அவர்கள் சுட்டினர்.

பயணிகள் கூட்டத்தைக் குறைக்க மாற்று வழிகளை அவர்கள் பரிந்துரைத்தனர்.

உதாரணத்துக்கு, நகர மையத்துக்குச் செல்லும் பேருந்துச் சேவைக்கான நேர இடைவெளியைக் குறைப்பது, பயணக் கட்டணத் தள்ளுபடிகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பது போன்ற பரிந்துரைகளை அவர்கள் முன்வைத்தனர்.

இதற்கிடையே, குடியிருப்புப் பேட்டைகளுக்கும் நகர மையத்துக்கும் இடையே நகர நேரடிச் சேவைப் பேருந்துகள், விரைவுச்சேவைகளை வழங்குகின்றன.

வடகிழக்கு வட்டாரத்தைப் பொருத்தவரை 11 விரைவுச்சேவைப் பேருந்துகள் இயங்குகின்றன.

டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஐந்து புதிய பேருந்துச் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

நகர நேரடிச் சேவைப் பேருந்துகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று (அக்டோபர் 18) நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

காலை, மாலை உச்சநேரங்களின்போது கூடுதல் பேருந்துச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும் இதில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்